சென்னிமலையில் சிலை கடத்தல் கும்பலிடம் போலீஸார் விசாரணை
By பெருந்துறை | Published On : 05th June 2016 06:46 AM | Last Updated : 05th June 2016 06:46 AM | அ+அ அ- |

திருப்பூர் அருகே பிடிபட்ட சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேரிடம் சென்னிமலை காவல் நிலையத்தில் வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளனின் வீட்டில் ரூ. 50 கோடி மதிப்பிலான 55 பழங்கால கற்சிலைகளை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சிலை கடத்தலில் ஒரு கும்பலே ஈடுபட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகமடைந்தனர்.
இந்நிலையில், சிலை கடத்தலில் திருப்பூர் மாவட்டம், படியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்குத் தொடர்பு இருப்பதாக திருப்பூர் தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தனிப்படையினர் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், படியூரை அடுத்த சிவகிரிக்குச் சென்ற காவல் துறையினருக்கு, அங்கு ஒரு காரில் 3 பேர் சென்று கொண்டிருப்பதாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு கிடைத்த தகவலின்படி அந்த காரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அந்த காரில் வந்தவர்கள், ஈரோடு மாவட்டம், சென்னிமலை கிழக்கு தெருவைச் சேர்ந்த சரவணன் (42), அவரது உறவினர்கள் 2 பேர் எனத் தெரியவந்தது. காரில் இருந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஒரு சிலையும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிடிபட்ட 3 பேரிடமும் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிலை கடத்தல் தொடர்பாக சென்னிமலை பகுதியைச் சேர்ந்த சிலருக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனிப்படையினர் 3 பேரையும் அதே காரில் சென்னிமலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஆய்வாளர்கள் வெங்கடாசலம் (சென்னிமலை), ஞானப்பிரகாசம் (அறச்சலூர்), தனிப்படையினர் அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
சிலை கடத்தல் தொடர்பாக, சென்னிமலையைச் சேர்ந்த மற்ற நபர்கள் யார் யார், ஈரோடு மாவட்டத்தில் கோயில்களில் சிலை திருட்டு நடந்ததா, திருடப்பட்ட சிலைகள் இங்கிருந்து சென்னையில் உள்ள தொழிலதிபர் தீனதயாளன் பங்களாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சனிக்கிழமை காலை வரை அந்த 3 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது. இந்த சிலை கடத்தல் தொடர்பாக, இன்னும் பல முக்கிய புள்ளிகள் பிடிபடுவார்கள் எனத் தெரிய வருகிறது.