Enable Javscript for better performance
மழை வேண்டி  ஊரைவிட்டுச் சென்ற பெண்களை சமாதானம் செய்து அழைத்து வந்த ஆண்கள்- Dinamani

சுடச்சுட

    

    மழை வேண்டி  ஊரைவிட்டுச் சென்ற பெண்களை சமாதானம் செய்து அழைத்து வந்த ஆண்கள்

    By DIN  |   Published on : 15th October 2016 08:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மழை பெய்யாத ஊரில் நாங்கள் குடியிருக்க மாட்டோம் எனக் கூறி, ஊரைவிட்டுச் சென்ற கிராமத்துப் பெண்களை, நமது ஊருக்குக் கண்டிப்பாக மழை பெய்யும் எனக்கூறி, சமாதானம் செய்து ஊருக்குள் ஆண்கள் அழைத்து வந்தனர்.
     மொடக்குறிச்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வறட்சி அதிகரித்து, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்குகாகக் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
     இந்நிலையில், மழை வேண்டி மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் கிராம மக்கள் பல்வேறு விதமான வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். தானத்துப்பாளையம் பகுதியில் உள்ள  பெண்கள் ஒன்றுகூடி, மழை பெய்ய வேண்டியும், கிராமம் செழிக்க வேண்டியும் தொடர்ந்து மூன்று நாள்களாக, தினமும் காலை முதல் மாலை வரை விரதமிருந்து, மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் கோவிலில், மண் சட்டியில் கூழ் தயாரித்து விநாயகருக்குப் படைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
     இதையடுத்து, பெண்கள் ஒப்பாரிப் பாட்டுப் பாடி மழை பெய்ய வேண்டினர்.
    அதைத் தொடர்ந்து ஊர் தெய்வமான மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின்னர், மழை பெய்யாத ஊரில் நாங்கள் குடியிருக்க மாட்டோம் எனக் கூறி, பெண்கள் ஊரைவிட்டுச் சென்றனர். இதையடுத்து ஆண்கள் ஊர் எல்லை வரை சென்று, நமது ஊருக்குக் கண்டிப்பாக மழை பெய்யும், கிராமம் செழிக்கும், கடவுள் நம்மை காப்பாற்றுவார் எனக் கூறி, பெண்களை சமாதானம் செய்து ஊருக்குள் அழைத்து வந்தனர். இதேபோல் தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்றன.
     மொடக்குறிச்சி பகுதியில் அனைத்து கிராமங்களிலும் மழைசோறு எடுக்கும் வழிபாடு தினமும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai