அரசு கால்நடை மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டம்

அரசாணை எண் 49-ஐ முழுமையாக செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி ஈரோட்டில் அரசு கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

அரசாணை எண் 49-ஐ முழுமையாக செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி ஈரோட்டில் அரசு கால்நடை மருத்துவர்கள் புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் மோகன்ராஜ், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் புதன்கிழமை அளிக்கப்பட்டுள்ள மனு விவரம்:
 கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் 25 முதல் 28 ஆண்டுகளாக பதவி உயர்வே இல்லாத நிலையில் ஒரே பதவியில் பணிபுரியும் நிலையைக் களைய வேண்டும். பெரும்பாலானோர் கால்நடை உதவி மருத்துவர்களாகவே பணி ஓய்வு பெறும் நிலையை மாற்றவேண்டும். கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஆற்றல்மிகு உறுதியான பதவி நிலை விருத்தி (டிஏசிபி) அரசாணை 49 வெளியிடப்பட்டது.
 இந்த அரசாணையால் 122 அலுவலர்களுக்கு துணை இயக்குநர்களாகப் பணி நியமனமும், பணியிட மாறுதல்களும், அதேபோல கால்நடை உதவி மருத்துவர்களுக்கும் கலந்தாய்வு முறையில் குறியீடு செய்யப்பட்ட இடங்களுக்குப் பணியிட மாறுதல் மற்றும் பதவி நிலை மாற்றம் வழங்கி வெவ்வேறு பணியிடங்களில் பணியாற்றி வருகின்றனர்.
 இந்நிலையில், மே 27-ஆம் தேதி நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரின்  உத்தரவுப்படி அரசாணை 49 செயல்படுத்துவதை அரசின் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அரசாணை 49 செயலாக்கம் 90 சதவீதம் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் அரசாணை நிறுத்தப்பட்டதால் இத்துறையில் பதவி, பணியிட மாறுதலால் குடும்பம், குழந்தைகளின் கல்வி ஆகியவை கடும் சிக்கல்களுக்குள்ளாகியுள்ளன. இது, கால்நடை மருத்துவர்களுக்கு கடும் மனச் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
  எனவே, அரசாணை 49-ஐ பிப்ரவரி 28-ஆம் தேதி உள்ளபடி, புதிய ஊதிய நிர்ணயம் செய்து முழுமையாக செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு நடவடிக்கையாக புதன்கிழமை ஒருநாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com