ரூ. 90 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பிச்சைக்காரன் பள்ளம் ஓடை அருகே ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப கழிவுநீர் சுத்திகரிப்பு
Updated on
2 min read

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பிச்சைக்காரன் பள்ளம் ஓடை அருகே ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்து குடிநீர் ஆதாரத்தை மேம்பாடு செய்யும் திட்டத்தின்கீழ் 2 மாதிரி சுத்திகரிப்பு இயந்திரம் ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பிச்சைக்காரன்பள்ளம் ஓடை மற்றும் தொழில் கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்து குடிநீர் ஆதாரத்தை மேம்பாடு செய்யும் திட்டத்துக்கான புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக ரூ. 74  லட்சம் மதிப்பீட்டில் இயந்திரமும், கூடுதலாக மற்ற உபகரணங்களும் செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டது.  இந்த புதிய தொழில்நுட்பத்தை ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக தன்னிறைவு திட்டத்தின் கீழ் அரசின் சார்பில் ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து ஈரோடு அருகே உள்ள சூளை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை அருகே கழிவுநீரை புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நன்னீராக்கும் திட்டம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் பூமி பூஜையிட்டு பணிகளைத் தொடக்கி வைத்தனர்.
இந்நிலையில், பெங்களுருவில் அமைந்துள்ள அக்யூட்ரான் என்ற நிறுவனம், குறைந்த செலவில் புதிய தொழில் நுட்பத்தில்  ஈரோடு மாநகராட்சி கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீரை முழுமையாக சுத்திகரிப்பு செய்ய புதிய தொழில்நுட்பத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட 2 இயந்திரங்கள் சூளை பகுதியில் உள்ள பிச்சைக்காரன் பள்ளம் ஓடை மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட ஆட்சியர் நிதி மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 545 சாய, பிரிண்டிங் தொழிற்சாலைகள், 34 தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் தற்போது பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளை கையாண்டு கழிவுநீரை சுத்திகரித்து வருகின்றன.
நடைமுறையில் உள்ள பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளில் சவ்வூடு பரவல் இயந்திரம் மூலமாகவும், பல்முனை ஆவியாக்கும் இயந்திரம் மூலமாகவும் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் 1 லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சுமார் ஒரு ரூபாய் ஆகிறது. மேலும், விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு முறையில் எந்த விதமான ரசாயனங்களும் கலக்கப்படுவதில்லை.
நடைமுறையில் உள்ள பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளை விட குறைந்த செலவில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும், இத்தொழில்நுட்பத்தில் திடக்கழிவு வெளியேற்றம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com