ஈரோடு புத்தகத் திருவிழாவில் புலம் பெயர்ந்த மற்றும் வெளிநாடு வாழ் தமிழறிஞர்களின் படைப்புகளும் வாசகர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆண்டுதோறும் உலகத் தமிழர் படைப்பரங்கம் தனியே அமைக்கப்படுகிறது. வெளிநாடு வாழ் தமிழறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது படைப்புகள் இந்த அரங்கில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் தமிழறிஞர்களின் பெயர் அரங்கத்துக்கு ட்டப்படுகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழறிஞர் தனிநாயக அடிகள் பெயரில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 பதிப்பகங்கள் சார்பில் 3,200க்கும் மேற்பட்ட தலைப்புகளில், புலம் பெயர்ந்த தமிழறிஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
உலகம் முழுவதும் இருந்து தமிழுக்குத் தொண்டு செய்த மூத்த தமிழறிஞர்களை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களது புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அரங்கில் புலம் பெயர்ந்த மற்றும் வெளிநாடு வாழ் தமிழறிஞர்களான மலேசிய நாட்டைச் சேர்ந்த இர.த.வீரப்பன், புலவர் ப.மு.அன்வர், பைரோஜி எஸ். நாராயணன், அறிவானந்தன், முருகு சுப்பிரமணியன், மெ.அறிவானந்தன், ஆதி.குமணன், பி.சந்தரகாந்தம், வீ.செல்வராஜ், கரு.திவராசு,
சிங்கப்பூரைச் சேர்ந்த நா.கோவிந்தசாமி, பழநிவேலு, சிங்கை முகிலன், சி.வை.தாமோதரம் பிள்ளை, இலங்கையைச் சேர்ந்த அஸீஸ், கணேசையர், சில்லையூர் செல்வராசன், கா.சிவதம்பி உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இங்கு கவிதை, பண்பாடு, கதை, கட்டுரை, நாவல், சிறுகதை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இலங்கைத் தமிழறிஞர்களின் படைப்புகளை வாசகர்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.