சுடச்சுட

  

  சாலையைக் கடக்கும் காட்டெருமையை படம் பிடித்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

  By DIN  |   Published on : 22nd April 2018 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆசனூர் சாலையைக் கடக்கும் காட்டெருமையை படம் பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும என வனத்துறை எச்சரித்துள்ளது.
  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனச் சரகங்களுக்கு உள்பட்ட வனப் பகுதியில் புலி, சிறுத்தைப் புலி, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி வனப் பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விடுகின்றன.
  ஆசனூர் வனப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அங்குள்ள காட்டெருமைகள் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதி சாலையோரம் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, ஆசனூர் வழியாகச் செல்லும் திண்டுக்கல் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை காட்டெருமைகள் அடிக்கடி கடந்து செல்கின்றன. அவ்வாறு சாலையோரங்களில் சுற்றித் திரியும் காட்டெருமைகளை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் செல்லிடப்பேசி, கேமரா மூலம் படம் எடுக்கிறார்கள். இதனால் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
  இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
  வாகனங்களில் செல்பவர்கள் வன விலங்குகளைக் கண்டால் தங்களுடைய வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும்.
  சாலையோரம் சுற்றித் திரியும், சாலையைக் கடக்கும் காட்டெருமைகளை தொந்தரவு செய்யக் கூடாது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது வனத் துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai