வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஈரோடு கோட்டையில் உள்ள கஸ்தூரி அரங்காநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா  டிசம்பர் 8 இல் பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. டிசம்பர் 17 இல் சுவாமி நாச்சியார் கோலம், மோகினி அவதாரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து,  செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.55 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா எனும் பரவச முழக்கத்துக்கிடையே கஸ்தூரி அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவ சமேதராக பரமபதவாசலைக் கடந்து வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கஸ்தூரி அரங்கநாதரைப் பின் தொடர்ந்து இரவு முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரமபதவாசலைக் கடந்து சென்றனர்.
ஆண்டுக்கு  ஒரு நாளில் மட்டுமே உற்சவர் சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈஸ்வரன் கோயில்  வீதி, மணிக்கூண்டு வரை வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சிதந்தார். வழியெங்கும் காத்து நின்ற பக்தர்கள் கஸ்தூரி அரங்கநாதரை தரிசனம் செய்தனர். 
புதன்கிழமை இராபத்து நிகழ்ச்சி தொடங்குகிறது. 27 இல் நாம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.
விழாவையொட்டி, டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், ஆய்வாளர்  விஜயன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், செயல் அலுவலர் சீனிவாசன், எம்.எல்.ஏ. தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்படுகளை கோயில்  நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கொடுமுடியில்...: வைகுண்ட ஏகாதசியையொட்டி, கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு உற்சவர் அபிஷேகமும், 5.15 மணியளவில் சொற்கவாசல் திறப்பு விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, மகா தீபாராதனையும், 5.45 மணியளவில் பெருமாள் கருட வாகனத்தில் திருகொட்டகைக்கு பிரவேசம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பக்தர்கள் அதிகாலை 3 மணியிலிருந்து வரிசையாகக் காத்திருந்து, வீரநாராயணப் பெருமாளை வணங்கி சொர்க்கவாசல் வழியாக திருக்கொட்டகைக்கு வந்து கருட வாகனத்தில் அமைந்துள்ள பெருமாளை வழிபட்டனர்.
அவல்பூந்துறையில்...: அவல்பூந்துறை அலமேலுமங்கை லட்சுமி சமேத தாமோதரப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் திருமஞ்சனமும், மகா தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 108 குத்துவிளக்கு பூஜையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. நவரசம் கல்லூரி துணை முதல்வர் செல்வம், புலவர் தமிழரசன் ஆகியோரது சொற்பொழிவு நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இதேபோல, கஸ்பாபேட்டை வரதராஜப் பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com