Enable Javscript for better performance
திருச்சி - ஈரோடு மின் பாதையில் விரைவு ரயில் சோதனை ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி - ஈரோடு மின் பாதையில் விரைவு ரயில் சோதனை ஓட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மின் மயமாக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் சோதனைக்காக விடப்பட்ட விரைவு ரயிலின் இயக்கம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரால் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
     திருச்சியிலிருந்து கரூர் வழியாக ஈரோடு வரையிலான 145 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதை  ரூ. 110 கோடி செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த மின் வழித்தடத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான அதிகாரிகளால்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
     இதைத்தொடர்ந்து, மின் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட  இந்த  ரயில் திருச்சியில் இருந்து மதியம் 3.40
    மணிக்குப் புறப்பட்டு சுமார் 110 கி.மீ. வேகத்தில் ஈரோட்டுக்கு மாலை 5.20 மணிக்கு வந்தடைந்தது.
      இந்த ரயிலில் பயணம் செய்து வழிநெடுகிலும் ஆய்வு செய்துகொண்டே வந்த தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர்  மனோகரன் கூறியதாவது:
      ஈரோடு - திருச்சி ரயில் பாதை ரூ. 110 கோடி செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த மின் வழிப்பாதை கடந்த 2 நாள்களாக ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து, திருச்சி - ஈரோடு ரயில் மார்க்கத்தில் அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தில் ரயில் 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தது.
     திருச்சி - ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் 73 ஆளில்லா லெவல் கிராஸிங்குகள் உள்ளன. இவற்றை அகற்றுவதற்கும், மாற்று ஏற்பாடு  செய்வதற்கும்  ரயில்வே துணை மண்டல மேலாளர்தான் முடிவு செய்வார். இந்த புதிய மின் வழித்தட ரயிலை இயக்கியது குறித்த ஆய்வு அறிக்கை ரயில்வே அமைச்சகத்துக்கு ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். இதேபோல, சேலம் - கரூர் - திண்டுக்கல் ரயில் தடம் மின் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் - விருத்தாச்சலம் தடத்தை மின் மயமாக்குவதற்கு  ரயில்வே நிர்வாகம்  ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.
     சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா கூறியதாவது:
     ஈரோடு - திருச்சி புதிய மின் வழிப் பாதையில் சோதனை ஓட்டம், ஆய்வு வெற்றிகரமாக 
    நடந்தேறியுள்ளது. ரயில்வே அமைச்சகம் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆளில்லா லெவல்  கிராஸிங்குகள் மூடப்பட வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளது. இதில், சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல்  கிராஸிங்குகளும் வரும் ஜூன் மாதத்துக்குள் மாற்றி அமைக்கப்படும். ஈரோடு - திருச்சி புதிய மின் பாதை அமைக்கப்பட்டதன் காரணமாக  புதிய ரயில்கள் இயக்க  வாய்ப்பு உள்ளது. 
    தொலைதூரத்தில் இருந்து வரும் ரயில்களின் டீசல் என்ஜின்களை மாற்றுவதால் பயண நேரம் கூடுதலாகிறது. தற்போது மின் பாதை வழியாக ரயில்கள் இயக்கினால் பயணம் நேரம் குறையும் சாதகமான சூழ்நிலை பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai