Enable Javscript for better performance
முட்டைகோஸ் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை- Dinamani

சுடச்சுட

    

    முட்டைகோஸ் விலை கிலோ ரூ. 2-ஆக சரிந்துவிட்டதால் விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
     சத்தியமங்கலம் மலைப் பகுதி தாளவாடி ஊராட்சிக்கு உள்பட்ட திகினாரை, மல்லன்குழி சூசைபுரம், அருள்வாடி, கோடிபுரம், தலமலை, பெஜலட்டி, ஆசனூர் மலைக் கிராமங்களில் மஞ்சள், கேரட், வாழை, கரும்பு, மக்காச்சோளம் சாகுபடி செய்து வந்தனர். வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் புகுந்து கரும்பு, வாழை பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டனர்.
     மஞ்சள் விளைச்சலும் கட்டுப்படியாகாத விலைக்குச் சரிந்துவிட்டதால் இப்பகுதி விவசாயிகள்  கீரை வகையைச் சார்ந்த முட்டைகோஸ் பயிரிட்டனர். மூன்று மாத காலப் பயிரான முட்டைகோஸை நடவு செய்யும்போது கோஸ் கிலோ ரூ. 18 முதல் 22 வரை விற்கப்பட்டது. 
     இதனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு கோஸ் மீது ஆர்வம் ஏற்பட்டதால் மஞ்சள் சாகுபடிக்கு அடுத்தபடியாக சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் கணேஸ், நீலகிரி, சாண்டஸ் போன்ற கோஸ் பயிரிட்டிருந்தனர். தற்போது, அறுவடைக்குத் தயாரான நிலையில் கோஸ் உற்பத்தி பன்மடங்காக அதிகரித்துள்ளதால் போதிய விலை கிடைக்கவில்லை. தற்போது கிலோ ரூ. 2-ஆக சரிந்துவிட்டது.
     மேலும், நீலகிரி மலைப் பகுதியிலும் கோஸ் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு வரத்து அதிகமானதால் அதன் விலையும்  சரிந்துவிட்டது.
    தற்போது, முட்டைகோஸ் ஏக்கருக்கு 18 டன் வரை மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம்,  கோஸின் வரத்தும் அதிகரித்துவிட்டதால் வியாபாரிகள் கிலோ ரூ. 1.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலை கிலோ ரூ. 20-ஆக இருந்தது. 
     கோஸ் நாத்து ஒன்றுக்கு 50 பைசா வீதம் பெற்று ஏக்கருக்கு 25 ஆயிரம் நாத்து நடவு செய்யப்பட்டது. சாகுபடி காலத்தில் மூன்று முறை உரமிட்டு 12 வாரங்கள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்து, அதன் பிறகு வெட்டுக்கூலி என கணக்கிட்டால் உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்ட முடியவில்லை. விவசாயிகள் உழைப்பு வீணாகியுள்ளது மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் தற்போது கோஸ் விலையும் சரிந்துவிட்டதால் மலைக் கிராம விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai