Enable Javscript for better performance
வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் விடுப்பு எடுக்கும் போராட்டம்: பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் விடுப்பு எடுக்கும் போராட்டம்: பொதுமக்கள் அவதி

    By DIN  |   Published on : 09th February 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 7, 8-ஆகிய இரண்டு நாள்கள் மேற்கொண்ட தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
      வருவாய்த் துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாள்களில் பணியாற்றும்போது கூடுதல் பணி நேர மதிப்பூதியம் வழங்க வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு கடந்த ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் ரூ. 9,300 வழங்கியதுபோல இந்த ஊதியக் குழுவிலும் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தருக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும்.
     பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைந்து, 8-ஆவது ஊதியக் குழுவின் வருவாய்த் துறை அலுவலர்களுக்கான தகுதி ஊதியம்  வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரிவுக்கு துணை ஆட்சியர் நிலையில் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 10, 23 ஆகிய தேதிகளில் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பட்டம்,  போராட்டம் நடைபெற்றது.
     இதைத் தொடர்ந்து,  அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதன், வியாழன் 
    ஆகிய 2 நாள்களுக்கு தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய்த் துறை அலுவலர் 
    சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டத் தலைநகரங்களிலும் வருவாய்த் துறை சார்ந்த அலுவலகங்கள் முழு அளவில் இயங்காத காரணத்தால், பல்வேறு தேவைகளுக்காக அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள்  ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
     இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் கு.குமரேசன் கூறியதாவது: 
     தமிழகம் முழுவதும் சங்கத்தைச் சார்ந்த சுமார் 10,630 பேர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 412 உறுப்பினர்களில் 388 பேர் பங்கேற்றுள்ளனர். வருவாய்த் துறையில் காலியாக உள்ள 10,750 பணியிடங்களைத் தாமதமின்றி நிரப்ப வேண்டும் என்பதே பிரதானக் கோரிக்கையாகும். போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
     எனவே, சங்க நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்துப் பேசி  தீர்வு காண முன்வர வேண்டும். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் மத்திய சங்கம் கூடி காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai