Enable Javscript for better performance
பயிர்களைக் காக்க உயிர்நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பயிர்களைக் காக்க உயிர்நீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 24th March 2018 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு மாவட்டத்தில் காய்ந்து வரும் பயிர்களைக் காக்க உயிர் நீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கச் செயலர் செ.நல்லசாமி பேசியதாவது:
    பவானிசாகர் அணையில் 4.8 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. நீலகிரி மாவட்ட நீர்மின் அணைகளில் 6.9 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கீழ்பவானி ஒற்றை மதகு பாசனத்துக்கு இரண்டரை ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், பனை, தென்னை, வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்களும் கருகிவிட்டன. கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லை. நடப்பு ஆண்டு உயிர் நீர் திறக்க ஆட்சியரும், பொதுப்பணித் துறையினரும் அரசுக்கு பரிந்துரை செய்தும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, கருகிய பயிர்களைக் காக்க 15 நாள்களுக்கு மேல் உயிர் நீர் திறக்க வேண்டும் என்றார்.
    வேலாயுதம்(காலிங்கராயன் பாசன சபை தலைவர்) : காலிங்கராயன் பாசனப் பகுதியிலும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீராதாரத்துக்காக, உயிர் நீர் திறக்க வேண்டும். காலிங்கராயனில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, ஒன்றரை மாதமாகிறது. ஈரோடு சுற்றுப்பகுதியில் இருந்து சாய, சலவை, தோல் ஆலை கழிவுகளை, குழாய் மூலம், நேரடியாக காலிங்கராயன் கால்வாயில் விடுகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
    துளசிமணி (தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர்) : பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் பல இடங்களில் திருடப்படுகிறது. இதைத் தடுக்க வேண்டும். கீழ்பவானி ஒற்றை மதகு பாசனப் பகுதியான ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கருக்கு குறைந்தபட்சம் 3 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் திறக்க வேண்டும். அது உயிர் நீராக இல்லாமல், உரிமை நீராக திறக்க வேண்டும்.
    சுபி தளபதி(தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சபைத் தலைவர்) : பவானி ஆற்றில் இருந்து 17 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. சமீப காலமாக இந்த ஆற்றில் மணல் திருட்டும், தண்ணீர் திருட்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டாக ஒரு போகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. ஆனால், சட்ட விரோதமாக மின் இணைப்புப் பெற்று பொதுப்பணித் துறையினர் அனுமதியுடன் 5 கிலோ மீட்டருக்கு குழாய் அமைத்து தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பின் மாவட்ட வருவாய் அலுவலர் செ.கவிதா பேசுகையில், இதுபோன்ற சட்ட விரோத மின் இணைப்புகளை துண்டிக்க 15 பரிந்துரைகள் வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, மின் துறையினர் இணைந்து ஆய்வு செய்து தண்ணீர் திருடுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    இக்கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வராஜ், துணை இயக்குநர் ராஜேஸ்வரி ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai