Enable Javscript for better performance
ரூ. 3 கோடியில் நஞ்சை ஊத்துக்குளி ஊடு கால்வாய் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 3 கோடியில் நஞ்சை ஊத்துக்குளி ஊடு கால்வாய் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈரோடு அருகே நஞ்சை ஊத்துக்குளி ஊடு கால்வாயை ரூ. 3 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    ஈரோடு, சூரம்பட்டி அணைக்கட்டில் தேக்கிவைக்கப்படும் கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீர் ஊடு கால்வாய் வழியாக நஞ்சை ஊத்துக்குளி வரையிலும் பாய்கிறது. நஞ்சை ஊத்துக்குளி வரை 2,500 ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெற்று வரும் நிலையில் வாய்க்காலின் இருபுறமும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டியிருந்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 590 கட்டடங்கள் கடந்த ஆண்டு பொதுப்பணித் துறையினரால் அகற்றப்பட்டன. இதன் பிறகு இந்த வாய்க்காலின் ஒரு பகுதியை ஈரோடை தன்னார்வ அமைப்பினர் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.
    வாய்க்கால் கட்டி 50 ஆண்டுக்கும் மேலாக தூர்வாராத நிலையில் கடந்த ஆண்டு முதன்முறையாக வாய்க்கால் தூர்வாரப்பட்டது. இருப்பினும், இந்த வாய்க்கால் அமைந்துள்ள ரயில்வே காலனி, சென்னிமலை ரோடு, சாஸ்திரி நகர் போன்ற பகுதிகளில் இரு கரைகளிலும் இருந்து மண் சரிந்து விழுவதை தடுக்க முடியவில்லை. இதன் காரணமாக ஒரு ஆண்டில் பல இடங்களில் வாய்க்கால் தூர்ந்து போனது. குறிப்பாக ரயில்வே தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட வாய்க்காலின் இருபுறமும் உள்ள பாறைகள் சிதறி விழுந்ததால் அவற்றை அகற்றி, கரைகளைப் பலப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. அதன்படி, தற்போது ரூ. 3 கோடி செலவில் 12 கிமீ தொலைவுக்கு வாய்க்காலில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறையினரால் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
    இதைத் தொடர்ந்து, அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டு தூர்வாரும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறியதாவது:
    12 கிமீ தொலைவுள்ள நஞ்சை ஊத்துக்குளி ஊடு கால்வாயில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 கிமீ தொலைவுக்கு இரு கரைகளையும் கான்கிரீட் மூலம் பலப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் கசிவு நீர் வெளியேறுவதைக் கண்டறிந்து
    அந்த கரையும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும் அடித்தளத்தில் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் நிலத்தடிநீர் செறிவூட்டுவதற்காக அடித்தளத்தில் காங்கிரீட் அமைக்கப்படவில்லை. சாஸ்திரி நகர் ரயில்வே தண்டவாளத்திற்கு அடிப்பகுதியில் 11 மீட்டர் நீளம், 40 அடி ஆழத்தில் சிதறி விழும் பாறைகள் அமைந்துள்ள இரு கரைகளிலும், கான்கிரீட் மூலம் பாறைக்கற்கள் சிதறுவதைத் தடுக்கும் வகையில் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வாய்க்காலில் பலவீனமாக உள்ளதாகக் கருதப்படும் பல இடங்களில் கரைகளைப் பலப்படுத்தி தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும், மேடும், பள்ளமுமாக உள்ள தளமும் சமப்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ 25 ஆண்டுகளாக தண்ணீர் செல்லாத இந்த வாய்க்காலில் தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும் என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai