Enable Javscript for better performance
பங்குனி உத்திரத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு மாவட்ட முருகன் கோயில்களில்...
    ஈரோட்டு மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 
     ஈரோடு, திண்டல் வேலாயுதசாமி கோயிலில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். வள்ளி, தெய்வானை தம்பதி சமேதராக முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஈரோடு,  திண்டல், வீரப்பம்பாளையம், செங்கோடம்பாளையம், குமலன்குட்டை, ஆசிரியர் காலனி, சூரம்பட்டி, கருங்கல்பாளையம், ரயில்வே காலனி, மூலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவிரியில் இருந்து புனித நீர், பால் குடம், தீர்த்தக் காவடி எடுத்து ஊர்வலமாக திண்டல் முருகன் கோயிலுக்குச் சென்றனர். காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வேலாயுதசுவாமியை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
     இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது.
    கோபியில்...:  கோபி பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, சண்முகருக்கு சிவப்பு சாத்தி அலங்காரம் வியாழக்கிழமை செய்யப்பட்டது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு பச்சை சாத்தி அலங்காரத்தில் சண்முகர் வெள்ளிக்கிழமை காட்சியளித்தார். 
    வெள்ளிக்கிழமை காலை திருப்படி பூஜை விழாவும், காலை 9 முதல் மதியம் 1 மணி வரை காவடி, பால்குட அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    பவானியில்...: பவானி, காவேரி வீதி காசி விஸ்வநாதர் கோயில் திருவிழா மார்ச் 22-ஆம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அலங்கார வழிபாடுகளும், திருவீதி உலாவும் நடைபெற்றன. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை காசி விஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, தேரோட்டம் தொடங்கியது. 
     பவானி சங்கமேஸ்வரர் கோயில் முன்பு தொடங்கிய தேரோட்டத்தை, கோயில் உதவி ஆணையர் சி.கருணாநிதி, ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், தொழிலதிபர் அக்னி எஸ்.ராஜா உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர். 
     நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேரோட்டம் புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்தது. சனிக்கிழமை பழனி பாதயாத்திரை காவடிக் குழுவினரின் திருவீதி உலாவும், ஞாயிற்றுக்கிழமை பிஷாண்டவர் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.

    சென்னிமலை முருகன் கோயிலில்...சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
     இக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கியது. கைலாசநாதர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
     முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 6.15 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் இருந்து தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தேரை 3 முறை வலம் வந்து தேரில் சுவாமிகள் அமர வைக்கப்பட்டு, தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக காலை 7 மணிக்கு வடக்கு ராஜ வீதி சந்திப்புக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.
     விழாவையொட்டி, அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட்டது. 
     ஞாயிற்றுக்கிழமை காலை (மார்ச் 31) பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசன நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 
     விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ப.முருகையா, கோயில் செயல் அதிகாரி எம்.அருள்குமார், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai