Enable Javscript for better performance
ஓடைத்துறை குளத்துக்கு முறைகேடாகத் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    ஓடைத்துறை குளத்துக்கு முறைகேடாகத் தண்ணீர் திறப்பு: விவசாயிகள்  கண்டனம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓடைத்துறை குளத்துக்கு மீண்டும் முறைகேடாகத் தண்ணீர் திறப்பதற்கு துணைபோகும் அதிகாரிகள், அமைச்சருக்கு கீழ்பவானி விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு உள்பட்ட 1 லட்சத்து 3,500 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கு கீழ்பவானி வாய்க்காலில் ஏப்ரல் 29 முதல் மே 9-ஆம் தேதி வரை முதலில் 10 நாள்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. கூடுதலாக தண்ணீர் திறக்கக் கோரி கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, மேலும் 3 நாள்களுக்கு ஒருமுறையும், 2 நாள்களுக்கு ஒருமுறையும், கடைசியாக ஒருநாளும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மொத்தம் 16 நாள்களுக்குத் தண்ணீர் திறந்தபோதிலும், விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் திறப்பால் பயன் கிடைக்கவில்லை. 
    இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட தண்ணீர்  நிறுத்தப்பட்டது. இந்தத் தண்ணீர்  கடைமடைப் பகுதிக்குச் சென்றடையவில்லை என விவசாயிகள் புகார் கூறிவரும் நிலையில், கவுந்தப்பாடி அருகே ஓடைத்துறை குளத்துக்கு நல்லாம்பட்டி -கடுக்காம்பாளையம் ரெகுலேட்டரில் உள்ள அவசரகால வழியில் 2 நாள்களுக்கு முன் தண்ணீர் நிறுத்தப்பட்ட அதே நாளன்று மாலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    இந்த தண்ணீர் திறப்பு முற்றிலும் சட்ட விரோதமானது என்றும், அமைச்சரின் பரிந்துரையின் பேரில் அதிகாரிகள் இந்த முறைகேட்டில்  ஈடுபட்டு கடைமடை விவசாயிகளுக்குச் சென்றடைய வேண்டிய நீரை ஓடைத்துறை குளத்துக்கு திறந்துவிட்டது கண்டனத்துக்குரியது  என விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். 
     இதுகுறித்து, கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறியதாவது:  
    கீழ்பவானி பாசனத்துக்கு உள்பட்ட கசிவுநீரை சேகரிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் உள்ளன. இந்த ஏரி, குளங்கள் அனைத்துக்கும் வாய்க்காலின் கசிவுநீர் மட்டுமே முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. ஏரி, குளத்துக்கு என பிரத்யேகமாக தண்ணீர் திறக்கப்படுவதே இல்லை. அண்மைக்காலமாக ஓடைத்துறை குளத்துக்கு மட்டும் முறைகேடாக அமைச்சரின் தூண்டுதலின்பேரில் தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்.
    கடந்த முறை ஓடைத்துறை குளத்துக்கு முறைகேடாக தண்ணீர் திறக்கப்பட்டபோது, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தபோது, வாய்க்காலில் மரங்கள் விழுந்ததால் கரையை காப்பாற்றுவதற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாக விளக்கமளித்தார். தற்போது, கடைமடை பாசன விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட தண்ணீரைக் கூட விட்டுவைக்காமல் அமைச்சர், அவர்களது உறவினர்கள் பயனடையும் வகையில், ஓடைத்துறை குளத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமுறைகளை மீறி தண்ணீர் திறக்கப்படுவது சட்டவிரோதமானது. கீழ்பவானி பாசன விதிகளுக்கு முரண்பாடனது. இதற்கு அதிகாரிகளும் துணை போகின்றனர். அதிகாரிகளின் துஷ்பிரயோகத்தையும், அமைச்சரின் தலையீட்டையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக ஓடைத்துறை குளத்துக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai