Enable Javscript for better performance
குறைந்த நேர மும்முனை மின் விநியோகத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார்- Dinamani

சுடச்சுட

    

    குறைந்த நேர மும்முனை மின் விநியோகத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகப் புகார்

    By DIN  |   Published on : 18th May 2018 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    8 மணி நேரம் வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
     இதுகுறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்திரராசு வெளியிட்ட தகவல்:
     ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் எட்டு மணி நேரம் மட்டுமே வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தால் விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
    மாவட்ட அளவில் பகலிலும், இரவிலும் தலா 4 மணி நேரம் என 8 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
     மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகவும், மின்தடை இல்லாத மாநிலமாக திகழ்வதாகவும், பிற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்குவதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து தினமும் பல முறைக்குமேல் ஈரோடு மாநகரப் பகுதியிலும், 20 முறைக்கு மேல் கிராமப் பகுதியிலும் மின்தடை ஏற்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் 5
    நிமிடங்களிலும், சில நேரங்களில் அரை மணி நேரத்துக்குப் பிறகே  மின்சாரம் கிடைக்கிறது.  
    மொடக்குறிச்சி, சிவகிரி, கொடுமுடி உள்பட பல பகுதிகளில் நள்ளிரவு 2 முதல் அதிகாலை 6 மணி வரையும், பகல் நேரத்தில் 10 முதல் பிற்பகல் 2 மணி வரையும் மும்முனை மின்சாரம் கிடைக்கிறது. இதில், அவ்வப்போது மின்தடையும் ஏற்படுகிறது.
     இதனால், வறட்சியான நிலையில் ஆழ்துளைக் கிணறு மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பல ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள்  நீர்மூழ்கி மோட்டார்கள் இருமுனை மின்சாரத்தில் இயங்குவதில்லை. இதனால், தற்போது கரும்பு, மரவள்ளி, வாழை  சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டீசல் மோட்டார்கள் மூலமும், லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கியும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இருமுனை மின்சாரத்தை கெப்பாசிட்டர் வைத்து மும்முனை மின்சாரமாக மாற்றி பயன்படுத்தும் நிலை உள்ளது. வரும் ஜூனில் மஞ்சள் நடவுப் பணி தொடங்குவதற்காக வயல்களைத் தயார் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில், பகலிலும், இரவிலும் தலா 8 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மும்முனை மின்சாரம் சீராக  இல்லாததால் தொழிற்சாலைகள், சிறு தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன. இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai