Enable Javscript for better performance
கூட்டுறவு வங்கி செயல்பாடு முடக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு வங்கி செயல்பாடு முடக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்பாடு முடக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மே 21 முதல் ஒட்டுமொத்த விடுப்பு எடுக்க ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
    தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலால் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதனால், பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளர் கே.எம்.சேதுபதி தலைமையில் ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் அளித்துள்ள மனு:
    தமிழகத்தில் 4 கட்டமாக கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவ்வழக்கு விசாரணையில் உள்ளது.
    ஏற்கெனவே பொறுப்பில் இருந்த நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் மே 8-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது, செயலாட்சியர் அல்லது நிர்வாகக் குழு இல்லாததால் தொடக்க கூட்டுறவுச் சங்கங்களின் எவ்விதத் தீர்மானமும் இயற்ற இயலவில்லை.
    பயிர்க் கடன், இதர கடன் வழங்க இயலவில்லை. மத்திய வங்கியில் காசோலைகள் மூலம் பணம் பெற இயலாததால், வைப்புத் தொகைகளைத் திருப்பி வழங்கவும், அன்றாட வரவு, செலவுகளை மேற்கொள்ளவும் முடியாத நிலை உள்ளது. இதனால், மே 21-ஆம் தேதி முதல் பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு எடுத்துள்ளோம்.
    சங்க நிர்வாகம் தொய்வின்றி நடைபெற உரிய தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஆட்சியர், மண்டல இணைப் பதிவாளர்களுக்கு தொழிற்சங்கம் சார்பில் கடிதம் வழங்கியுள்ளதாகவும், அரசின் நடவடிக்கைக்கு ஏற்ப தங்களது விடுப்பு எடுக்கும் தீர்மானம்  அமையும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai