உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் குவளைகள் பயன்படுத்தினால் அபராதத்துடன் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் உணவு விடுதிகள், கடைகளில் பிளாஸ்டிக், காகிதக் குவளை பயன்படுத்தினால்

ஈரோடு மாவட்டத்தில் உணவு விடுதிகள், கடைகளில் பிளாஸ்டிக், காகிதக் குவளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
ஈரோடு மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க பொது சுகாதாரத் துறை, மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் கைளால் தொட்டு பயன்படுத்தப்படும் நாற்காலிகள், அரசு, தனியார் பேருந்துகளின் கைப்பிடி கம்பிகள் ஆகியவற்றில் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை ஆட்சியர் கதிரவன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் கூறியதாவது:
பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் அமரும் நாற்காலிகள், கைப்பிடி கம்பிகள் மூலம் தொற்றுநோய் பரவும் வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்கும் வகையில் பொது சுகாதாரம், மாநகராட்சி சார்பில் ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
உணவு விடுதிகள், தேநீர் கடைகளில் பிளாஸ்டிக், நெகிழி ஊட்டப்பட்ட காகிதக் குவளைகள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இக்குவளையால் கொசு உற்பத்தியாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பிளாஸ்டிக், காகிதக் குவளைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். மீறி பயன்படுத்தும் கடைகள் மீது அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, இதே தவறைச் செய்யும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார். 
முன்னதாக, ஈரோடு பேருந்து நிலையத்தின் முன்பு ராஜாஜி புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, பாப்பாத்தி ஆகியோர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் காலணி தைக்கும் கூலி வேலையில் ஈடுபட்டிருந்தனர். இதைக் கண்ட ஆட்சியர் கதிரவன் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, உரிய சிகிச்சையை அளிக்கவும், முதியோர் உதவித் தொகை பெற ஆணையும் வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள காலாவதியான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ரமாமணி, நலப் பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், மாநகர நல அலுவலர் சுமதி, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com