புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து, மூலவர், ஆதிசேஷன் மீது அனந்த சயன கோலத்திலும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். கடைசி சனிக்கிழமை என்பதால் சனிக்கிழமை அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பிரகாரம் முழுவதும்  வெயிலைச் சமாளிக்கும் வகையில் பந்தல் போடப்பட்டிருந்தது. பல்வேறு அமைப்பினரின் சார்பில், நாராயண சகஸ்ரநாம சங்கீர்த்தனையுடன் நாரயண பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாநகரம், சூரம்பட்டி, காசிபாளையம், சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம், திருவள்ளுவர் வீதி, வாசுகி வீதி, தில்லைநகர், பத்ரகாளியம்மன் கோயில் வீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கஸ்தூரி அரங்கநாதரை வழிபட்டுச் சென்றனர்.
இதேபோல, அம்மாபேட்டை சித்தேஸ்வரன் கோயில், கூடுதுறை ஆதிகேசவப் பெருமாள் கோயில், கவுந்தப்பாடி வரதராஜ பெருமாள், மாயபுரம் பெருமாள் மலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
கொடுமுடியில்...
கொடுமுடி அருகே உள்ள கொளத்துப்பாளையம்புதூரில் மாமரத்தின் அடியில் எழுந்தருளியுள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாமரத்துப் பெருமாள் கோயிலில், சனிக்கிழமை காலை 8 மணி அளவில் பக்தர்கள் அனைவரும் கொடுமுடி காவிரி ஆற்றுக்குச் சென்று காவிரியில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து, மாமரத்துப் பெருமாளுக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் செய்தனர். 
தொடர்ந்து, 10 மணியளவில் பெருமாளுக்கு அலங்காரம், ஆராதனை, சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை எஸ்.சுரேஷ் செய்திருந்தார்.அதேபோல, கொடுமுடி - காங்கயம் சாலையில் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலில் அபிஷேகம், அலங்கார ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
சென்னிமலையில்...
சென்னிமலை, மேலப்பாளையம் ஆதிநாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அலமேலு மங்கை, நாச்சியார் மங்கை சமேத ஆதிநாராயணப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10.30 மணியளவில் கோயிலில் இருந்து சுவாமி ஊர்வலம் புறப்பட்டு மேலப்பாளையத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.  இதேபோல, சென்னிமலை, காங்கயம் சாலை, ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெருந்துறை, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலத்தில்...
சத்தியமங்கலம் ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கோயிலில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. ஆஞ்சநேயர், சீதையுடன் ராமர், லட்சுமணன் விக்கிரங்களுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றன. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ராம ஆஞ்சநேயர் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்திலும் புரட்டாசி நிறைவு விழா நடைபெற்றது. ரங்கநாதருக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து அலங்கார பூஜையும், நின்ற, அமர்ந்த, படுத்த என மூன்று நிலைகளில் உள்ள மூலவருக்கு புஷ்ப அலங்காரமும் நடைபெற்றன.  மஹா அபிஷேக நிகழ்ச்சியில் பக்தர்கள் துளசி, பூமாலைகளை சுவாமிக்குப் படைத்து பெருமாளை தரிசித்தனர்.  கருட சேவை நிகழ்ச்சியில், ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ஸ்ரீ ரங்கநாத உற்சவர் கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com