மக்கள் விரும்பும் திட்டங்களை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன

மக்கள் விரும்பும் திட்டங்களை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். 

மக்கள் விரும்பும் திட்டங்களை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். 
பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 5 முறை பொறுப்பில் இருந்த திமுக ஆட்சியில் தொழில்வளம் அழிந்துவிட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் 13 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அதிமுக ஆட்சியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிமுகவைத் தொடர்ந்து விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுடன், தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதிக்கக் தயார். கோபாலபுரத்துக்கே நேரில் சென்று பேசத் தயாராக உள்ளேன். ஊழலில் திளைத்த திமுகவுக்கு, அதிமுகவை விமர்சிக்கும் தகுதி கிடையாது. 
மேட்டுப்பாளையம் விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டதால், 15 ஆயிரம் தொழிலாளர் வேலை இழந்துள்ளனர். திமுக ஆட்சியில் இருண்ட தமிழகம், அதிமுக அரசு மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததால் வெளிச்சம் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பிரச்னையால் திருப்பூர் மாவட்டத்தில் தொழில் பாதிப்பு ஏற்பட்டபோது ரூ. 200 கோடி ஒதுக்கி, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனால், தற்போது 5 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டு வருகிறது. 
பாமக இளைஞரணித் தலைவர் ராமதாஸ் அமைச்சராக இருந்தபோது, சுகாதாரத் துறையில் செய்த ஊழல்கள் அதிகம். அவருக்கு கீழ் உள்ள அதிகாரி வீட்டிலேயே பல கோடி மதிப்பிலான பணம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. திமுக கல்வித் திட்டத்தில் சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்து கல்வித் தரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டது. தற்போது கல்வித் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 
மக்களுக்கு பாதிப்பான எந்தத் திட்டங்களையும் நிறைவேற்ற அதிமுக அரசு அனுமதிக்காது. ஆனால், மக்கள் விரும்பும் திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன, விமர்சிக்கின்றன. இதனை, திமுக, மதிமுகவினரே செய்கின்றனர். சேலம் - கோவை 8 வழிச் சாலைக்கு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவிக்கின்றனர். ஆனால், ஒருசிலர் தொடர்ந்து எதிர்க்கின்றனர். அதிமுக அரசின் மீதான நல்லெண்ணத்தை யாராலும் குலைக்க முடியாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com