ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலமாக சனிக்கிழமை நடபெற்றது.


ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலமாக சனிக்கிழமை நடபெற்றது.
ஈரோடு, சம்பத் நகர் பிரிவில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்துக்கு, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் கு.பூசப்பன் தலைமையில், மாநில பொருளாளர் நா. சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவர் ப.ஜெகதீசன், மாவட்ட பொதுச் செயலாளர் ப.சக்தி முருகேஷ் ஆகியோர் முன்னிலையில், கீழ்பாவனி பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாதி காசியண்ணகவுண்டர் ஊர்வலத்தை தொடக்கிவைத்தார்.
ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 220 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் புறப்பட்டு பெரியவலசு நான்கு சாலை, முன்சிபல் காலனி, மேட்டூர் சாலை, பிரப் சாலை, காமராஜர் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பெரிய மார்க்கெட், கிருஷ்ணா திரையரங்கம், கருங்கல்பாளையம் வழியாக காவிரி கரையை அடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. முன்னதாக, வழிநெடுகிலும் சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று விநாயகர் சிலைகளை வழிபட்டனர்.
சத்தியமங்கலத்தில்...: சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து மக்கள் கட்சி, பொதுமக்கள் சார்பில் 70 சிலைகள் அலங்கரிக்கப்பட்டு டிராக்டர், டெம்போ, மினி ஆட்டோ போன்ற வாகனங்களில் எஸ்.ஆர்.டி. கார்னருக்கு எடுத்து வரப்பட்டன. தொடர்ந்து, அனைத்து வாகனங்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்து முன்னணி நிர்வாகக் குழு உறுப்பினர் குணா தலைமையில் ஊர்வலம் தொடங்கப்பட்டது. ரங்கசமுத்திரம், புதிய பேருந்து நிலையம், ஆற்றுப்பாலம், காவல் நிலையம், தபால் ஆபீஸ் வீதி, அக்ரஹாரம், கோட்டுவீராம்பாளையம், பழைய மார்க்கெட், மணிக்கூண்டு, சத்யா தியேட்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று சத்தியமங்கலம் சித்தி விநாயகர் கோயில் அருகே பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
நிகழ்ச்சியையொட்டி, சுமார் 300 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கோபியில்...: கோபிசெட்டிபாளையம், லக்கம்பட்டி பேரூராட்சியில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
அகில பாரத அனுமன் சேனா இயக்கத்தின் சார்பில், 30 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்டத் தலைவர் மோகனசுந்தரம்,
மாவட்ட செயலாளர் தங்கராசு, லக்கம்பட்டி பொறுப்பாளர் நவீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கொடுமுடியில்...: கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் வாகனங்களில் வைத்து, மேளதாலங்கள் முழங்க நடனமாடிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு வழிபாடுகள் செய்து, காவிரி ஆற்றில் கரைத்தனர். கொடுமுடி, சிவகிரி, தாமரைப்பாளையம், சாலைப்புதூர், பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட சிலைகள் காவிரியில் கரைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com