மத்தியில் ஆட்சி மாற்றத்துக்குப் பாடுபடுவோம்: வைகோ

வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கும் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையப் பாடுபடுவோம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.


வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கும் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையப் பாடுபடுவோம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோ பொதுவாழ்வு பொன்விழா என முப்பெரும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வைகோ மேலும் பேசியதாவது:
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநில சுயாட்சி அதிகாரம் குறித்த குழு அமைக்க வேண்டுமென குரல் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம்தான். அதைத் தொடர்ந்து 1974இல் தமிழக சட்டப் பேரவையில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் எதிரொலியாக காஷ்மீர், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாநில சுயாட்சியை வலியுறுத்தி மாநாடுகள் நடத்தப்பட்டன. அந்தக் கோரிக்கை நீர்த்துப் போகாமல் அப்படியே இருக்கிறது.
உலகில் அடக்கு முறைக்கு ஆளான தேசிய இனங்கள் எல்லாமே ஆயுதப் போராட்டத்தை நடத்தியுள்ளன. அதன்படி உலகமெங்கும் உள்ள 10 கோடி தமிழர்களின் கனவை நனவாக்க வேண்டும். ஈழ விடுதலை உணர்வு எனது ரத்தத்தில் பரவிக்கிடக்கிறது. தனது பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபட்சவை நரேந்திர மோடி அழைத்தபோது, நெஞ்சில் கோடரியைப் பாய்ச்சியதைப் போல உணர்ந்தோம்.
எனவே, மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கிற கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்க நாங்கள் துணை நிற்போம். தமிழகத்தில் திமுக ஆட்சி அமையப் பாடுபடுவோம் என்றார் வைகோ.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை அமைச்சர் ராமசாமி, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி பாகவி உள்ளிட்டோர் பேசினர்.
ஃபரூக் அப்துல்லா பேச்சு...: மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பேசினார்.
ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற மதிமுக முப்பெரும் விழா, மாநில மாநாட்டில் பங்கேற்று பொதுச் செயலாளர் வைகோவுக்கு வீரவாள் வழங்கி மேலும் அவர் பேசியதாவது:
நமது நாடு பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி தற்போது நடைபெறுகிறது. அதை முறியடித்தாக வேண்டும். நீங்கள் கோயிலுக்கோ, மசூதிக்கோ, குருத்வாராவுக்கோ செல்பவர்களாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்மை அழிக்க நினைப்பவர்களை முழுமையாக எதிர்க்கத் தவறினால் இந்தியா என்பதே இல்லாமல் போய்விடும். இந்த நேரம் நாம் ஒற்றுமையுடன் களப் பணியாற்ற வேண்டும் என்றார்.
அணை பாதுகாப்பு வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும்
அணை பாதுகாப்பு வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக சார்பில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழா மாநில மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு, ராசிமணல் ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்ட எச்சூழலிலும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. மக்களுக்கு எதிரான மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம், காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மக்களாட்சி தத்துவத்தைக் கேள்விக்குறியாக்கும் மத்திய அரசுக்கும், அதன் கைப்பாவையாக இயங்கும் அதிமுகவையும் வீழ்த்த, திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து அரசியல் கடமை ஆற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.
டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய முதலீட்டு மண்டலம், தேனியில் நியூட்ரினோ திட்டம் போன்றவற்றைக் கொண்டு வரும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழக விளை நிலங்கள் வழியாக பைப் லைன் பதிக்கும் கெயில்' திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று பணியைத் தொடர வேண்டும்.
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை, மக்கள் எதிர்ப்பை உணர்ந்து அதைக் கைவிட்டு மூன்று வழித்தடத்தை விரிவுபடுத்த திட்டமிட வேண்டும். ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு வரி, திட்டங்கள் மூலம் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் ஓராண்டு கடந்துவிட்டதால் உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மல்லை சத்யா வரவேற்றார். நிர்வாகி துரை பாலகிருஷ்ணன் கொடியேற்றி வைத்தார். திருப்பூர் சு.துரைசாமி தலைமை வகித்தார். மக்களவை முன்னாள் உறுப்பினர் கணேசமூர்த்தி மாநாட்டு அரங்கைத் திறந்துவைத்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப் படத்தை திமுக பொருளாளர் துரைமுருகன் திறந்து வைத்துப் பேசினார். சிவகங்கை மாவட்டச் செயலர் புலவர் செ.செவந்தியப்பன், பொதுச் செயலர் ஏ.கே.மணி ஆகியோர் பெரியார் சுடரை ஏற்றினர்.
பெரியார் புகைப்படக் கண்காட்சியை வழக்குரைஞர் செ.வீரபாண்டியன், அண்ணா புகைப்படக் கண்காட்சியை மருத்துவர் சி.கிருஷ்ணன், மதிமுக வெள்ளி விழா கண்காட்சியை வழக்குரைஞர் தேவதாஸ், வைகோ பொன் விழா புகைப்படக் கண்காட்சியை மருத்துவர் ரொகையா ஆகியோர் திறந்துவைத்தனர்.
தொடர்ந்து, வைகோ பொன் விழா மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டார். தமிழ்தேச விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் சத்யராஜ் உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com