ஈரோடு வணிகர் சங்க நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய அதிமுகவினர்

ஈரோடு மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகளிடம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் ஆதரவு திரட்டினர்.

ஈரோடு மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகளிடம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் ஆதரவு திரட்டினர்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறனை ஆதரித்து அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிடம் புதன்கிழமை ஆதரவு திரட்டினர்.  அப்போது, ஈரோடு மக்களவைத் தொகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து அமைச்சர்களிடம் வணிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
 இதில் ஈரோடு புறவழிச் சாலைத் திட்டத்தை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும். சாய, சலவைக் கழிவுகளை சுத்திகரித்து கடலில் கொண்டு கலக்கும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி ஜவுளித் தொழிலைப் பாதுகாத்திட வேண்டும். ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் அமைத்திட வேண்டும். 
ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு ஜவுளித் தொழில்நுட்பப் பயிற்சி கல்லூரி ஏற்படுத்த வேண்டும். பருத்தி நூல் விலைகளில் உள்ள விலை ஏற்ற இறக்கத்தை சரி செய்திட மத்திய அரசு அறிவித்துள்ள பருத்தி வங்கிகள் மற்றும் நூல் வங்கிகள் ஈரோட்டில் அமைத்திட வேண்டும். 
தாராபுரம் பகுதியை உணவு ஏற்றுமதி மண்டலமாக அறிவித்து அந்தப் பகுதியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஈரோட்டில் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்திட நேரடியாக விவசாயிகளே மஞ்சள் ஏற்றுமதி செய்ய ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும். மஞ்சளில் இருந்து மஞ்சள் தூள், மருந்துப் பொருள், மஞ்சள் எண்ணெய் தயாரிக்கும் ஆலை அமைத்திட வேண்டும். ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிவுள்ளோம். இந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறன் அரிசி வியாபாரி,  அந்த வகையில் வியாபாரிகள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.  நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை பொதுச்செயலர் என்.சிவநேசன், மாவட்டத் தலைவர் ஆர்.எம்.தேவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com