எங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு: தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
By DIN | Published On : 04th April 2019 06:49 AM | Last Updated : 04th April 2019 06:49 AM | அ+அ அ- |

எங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிப்பது என தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்களின் கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் படி விளைப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உயர்மின் கோபுரம் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
விளை நிலங்களை விவசாயிகளின் அனுமதியில்லாமல் கையகப்படுத்தக் கூடாது. 60 வயதுக்கு மேற்பட்ட சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சொட்டுநீர் பாசனத்துக்கான மானியத்தை சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் நிர்வாகத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நீர் திறக்கும் முழு அதிகாரம் ஆட்சியருக்கு வழங்கி சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
மீனவர்களுக்கு வழங்குவதைப் போல சிறு குறு விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்.
நெல்லுக்கு கிலோ ரூ.25, கொப்பரைத் தேங்காய்க்கு கிலோ ரூ.100, கரும்பு டன்னுக்கு ரூ.4000, பால் கொள்முதல் குறைந்த பட்சம் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது பல்வேறு கேரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.