"மாவட்டத்தில் 222 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை'

ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தெரிவித்தார். 
தேர்தல் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா பேசியதாவது:
பொதுப் பார்வையாளர், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 222 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே,  பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க வங்கி மற்றும் மத்திய அரசுப் பணியாளர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நுண்பார்வையாளர்கள் அந்த வாக்குச் சாவடிகளுக்கான அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணித்து பொதுப் பார்வையாளருக்கு நேரடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். நுண்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களது வாக்குச் சாவடிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் முறையான பதிவேடுகளைப் பராமரித்து அவற்றை வாக்குப் பதிவு நாளன்று வாக்குப் பதிவு முடிந்தவுடன் பொதுப் பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்குச் சாவடி முகவர்களிடம் சரியான அடையாள அட்டை உள்ளதா எனவும், வாக்காளர்கள் வாக்களிக்கும்போது, தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட 11 அடையாள அட்டைகள் மூலம் வாக்களிக்கின்றனரா எனவும் உறுதி செய்திட வேண்டும்.
எனவே நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்கள் அனைவரும் தேர்தலை நேர்மையாக நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். 
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஈஸ்வரன் (கணக்குகள்), ரமேஷ் (வளர்ச்சி), முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட  நுண்பார்வையாளர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com