தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான 3 ஆம் கட்டப் பயிற்சி முகாம்
By DIN | Published On : 14th April 2019 04:38 AM | Last Updated : 14th April 2019 04:38 AM | அ+அ அ- |

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாவட்டத்தில் 8 இடங்களில் மூன்றாம் கட்டப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 2,213 வாக்குச் சாவடிகளில் 10,624 ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஏற்கனவே 2 கட்டப் பயிற்சி முகாம் நிறைவடைந்துள்ளன. மேலும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான படிவம் மற்றும் அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே வாக்களிப்பதற்கான இடிசி எனப்படும் தேர்தல் பணிச் சான்று ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மூன்றாம் கட்டப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வாக்குச் சாவடி அலுவலர் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய 6 நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டன. மேலும், ஏப்ரல் 17ஆம் தேதி எந்த வாக்குச் சாவடியில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஆணை வழங்கப்படவுள்ளது. இந்த ஆணையைப் பெற்றுக்கொண்டு அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு ஊழியர்கள் மாலைக்குள் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.