சுடச்சுட

  

  மக்கள் நலனில் அக்கறை கொண்டது அதிமுக கூட்டணி: அன்புமணி

  By DIN  |   Published on : 16th April 2019 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்கள் நலனில் அக்கறை கொண்டது அதிமுக கூட்டணி என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 
  திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஆதரவு கோரி பவானியில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை வகித்துப் பேசினார்.
  இக்கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியதாவது : 
  காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் துரோகம் செய்தன. இதனால் கர்நாடகத்தில் 4 அணைகள் கூடுதலாகக் கட்டப்பட்டதால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து போனது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அனைவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயிகளின் துயரங்களை அறிந்தவர்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கோ, வைகோவுக்கோ விவசாயம் குறித்து எதுவும் தெரியாது. அதிமுக அமைதியான கூட்டணி. திமுக கூட்டணி அராஜகம், கட்டப் பஞ்சாயத்து கூட்டணி. எதிர்க்கட்சியாக உள்ளபோதே திமுகவினர் அராஜகம் செய்கின்றனர். கடந்த 50 ஆண்டுகால கோரிக்கையான தோனிமடுவு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். மணியாச்சி பள்ளம் திட்டத்ததால் ஏரி, குளங்களில் தண்ணீரை சேமிக்க முடியும். நீட் தேர்வு வருவதற்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம். அதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் வாயுத் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட திட்டங்கள் வருவதற்கும் திமுகதான் காரணம். தற்போது மக்களை ஏமாற்றும் வகையில் திமுக போராட்டம் நடத்தி வருகிறது என்றார். 
  அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஈஎம்ஆர். ராஜா,  ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலர் மு.வேலுசாமி, மாவட்டத் துணைச் செயலர் அ.பெ.முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai