பதவிக்காக கொள்கையை துறந்தது மதிமுக: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பதவிக்காக கொள்கையை துறந்த கட்சி  மதிமுக என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 

பதவிக்காக கொள்கையை துறந்த கட்சி  மதிமுக என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
 ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு (எ) ஜி.மணிமாறனை ஆதரித்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே வேனில் இருந்தபடி திங்கள்கிழமை இரவு அவர் மேலும் பேசியதாவது: 
ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் திமுக சின்னத்துக்கு வாக்கு கேட்கிறார்.  ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அந்தக் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.  இங்கு போட்டியிடும் வேட்பாளர் மதிமுக உறுப்பினரா அல்லது திமுக உறுப்பினரா என்பதை வைகோ விளக்க வேண்டும். கூட்டணிக்காகக் கொள்கையை விட்டுவிட்டார். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சுயமரியாதை கட்சிகள். 
ஏனெனில் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில்தான் போட்டியிடுகின்றன. வைகோ தன்னுடைய சுய லாபத்துக்காக, பதவிக்காக வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த காலத்தில் மு.க.ஸ்டாலின் குறித்தும், அந்தக் கட்சியினர் செய்த ஊழல்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்த வைகோ, இப்போது எப்படி கூட்டணி சேர்ந்தார்?  இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து பேசிய வைகோ, இப்போது அதுகுறித்து பேசுவதில்லை. மதிமுக தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிட்டது.  
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசைப் பற்றியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசைப் பற்றியும் குறை கூறி வருகிறார். இந்திய நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். எனவே அவர்களுக்கு ஊழலைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
  மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என கூறுகிறார். நாங்கள் என்ன அவ்வளவு என்ன மோசமான நிலையிலா இருக்கிறோம்?  முதல்வராக வேண்டும் என்ற அவர் கனவு எப்போதும் நிறைவேறாது.  தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்றார்.  இதனைத்தொடர்ந்து சூளை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
பாண்டியாறு புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்படும்
முன்னதாக  மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: 
காங்கிரஸும், திமுகவும் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகள் பெற முயற்சிக்கின்றன. அந்தக் கூட்டணி கொள்கையில்லாத, சந்தர்ப்பவாத கூட்டணியாக உள்ளது. திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் இருண்டு கிடந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது ஜெயலலிதா அரசு. மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சி காணும் வகையில் தற்போது மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மொடக்குறிச்சி தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார். 
இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வி.பி.சிவசுப்பிரமணி, தோப்பு என்.வெங்கடாச்சலம்,  மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ஆர்.பி.கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com