வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு  3 அடுக்கு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு  3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்தார். 
ஈரோடு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு சாலைப் போக்குவரத்து தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் மாணிக் குர்ஷால், காவல் பார்வையாளர் சஞ்சய் ஹிந்துரவ் ஷிண்டே ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பிறகு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது: 
ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையமாக சித்தோடு சாலைப் போக்குவரத்து தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம், குமாரபாளையம் ஆகிய  6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு தனித்தனியே வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வைக்க பாதுகாப்பு வைப்பறை, கூடுதல் பாதுகாப்பு வைப்பறை, வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்பட்ட எழுதுபொருள்கள், கவர் உள்ளிட்ட தளவாடங்களுக்கான வைப்பறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவை ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் தனித் தனி கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றின் விவரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்து அச்சிடும் வசதிகள், சுற்று வாரியாக விவரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவதற்கான இணையதள வசதி, ஒரு சுற்றுக்கு 14 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எண்ணுவதற்கு மேஜைகள், வாக்கு எண்ணிக்கையை வேட்பாளர்களின் முகவர்கள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு வெளியில் இருந்து பார்வையிட வசதியாக தடுப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்திலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
வாக்குப் பதிவு முடிந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் செய்த பிறகு கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக வேட்பாளர்களின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளுக்கான கண்காணிப்பு அறையில் இருந்து பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மின்சார வசதி தடைபடாமல் தொடர்ந்து மின்வசதி இருக்க மாற்று ஏற்பாடு வசதிகளும், மேலும் கூடுதலாக மின்விசிறிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது என்றார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ம.தினேஷ், வட்டாட்சியர் (தேர்தல்) ரவிச்சந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com