சுடச்சுட

  

  வாக்குகளைத் தீர்மானிக்கப் போவது: தொடரும் பிரச்னைகளா? வளர்ச்சித் திட்டங்களால் கிடைக்கும் பலன்களா?

  By DIN  |   Published on : 17th April 2019 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஈரோடு மாநகராட்சியில் தீர்க்கப்படாமல் தொடரும் பிரச்னைகள் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா? அல்லது ஸ்மார்ட் சிட்டி போன்ற அரசின் திட்டங்கள் ஆளும்கட்சிக்கு சாதகமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சியினர் உள்ளனர். 
  ஈரோடு மக்களவைத் தொகுதியில் ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 80 சதவீதம் ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் அடங்கியுள்ள இந்த இரண்டு தொகுதிகளிலும் 4.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. 
  மாநகராட்சிப் பகுதியில் கல்வி அறிவு பெற்றவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் வசிப்பதால், இந்த வாக்குகளை மக்களவைத் தேர்தலின் போது வளைக்கப் போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு 
  எழுந்துள்ளது.
  ஈரோடு மாநகராட்சியின் சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களினால் மக்கள் படும் துன்பங்கள் எதிர்க் கட்சிக்கு ஆதரவாகவும் வாக்குகளைப் பெற்றுத்தரும் நிலை உள்ளது. 
  மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர், மேயர் இல்லாத நிலையிலும், குறிப்பிட்ட முன்னாள் கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் இன்னும் மாநகராட்சியில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.
  ஈரோடு மாநகராட்சியில் புதை சாக்கடைப்பணி,  புதை மின் கேபிள் பணி, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப் பணி என பல்வேறு காரணங்களால் நகர் முழுவதும் தோண்டப்பட்ட சாலைகளால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 
  ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் நேதாஜி மார்க்கெட்,  கனி ஜவுளிச் சந்தை அகற்றப்படும் என்ற அச்சத்தில் உள்ள வியாபாரிகளுக்கு ஆளுங்கட்சி போதுமான நம்பிக்கையைத் தரவில்லை. 
  ஈரோடு அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்ட மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் குறையாத நிலையில், புறநகர் பேருந்து நிலையம் போன்ற போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு தரும் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. நகரில் எங்குமே முறையான வாகன நிறுத்துமிட வசதி இல்லை.  
  மாநகராட்சியில் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, குப்பை வரி போன்றவை ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்களிடம் எதிர்ப்பைப் பெற்றுள்ளன. வரிவிதிப்பில் உள்ள குளறுபடிகளைப் போக்கக்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
   புதை சாக்கடைப் பணி நிறைவடைந்த பகுதிகளில், பணிகள் சரியாக மேற்கொள்ளததால், கழிவு நீர் வெளியேறி சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகிறது. மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், சாக்கடைகள் தூர்வாரப்படாததால், சுகாதாரக்கேடு நிலவுகிறது. குப்பைக் கிடங்கை முறையாகப் பராமரிக்காததோடு, இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. 
  பிச்சைக்காரன்பள்ளம், பெரும்பள்ளம் ஓடையில் இருந்து வெளியேறி காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு, தோல்கழிவு நீரால் மாசடைந்த, துர்நாற்றம் வீசும் குடிநீரையே ஈரோடு மாநகராட்சி மக்கள் அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சாயக்கழிவுகளால் நோய் பாதிப்பும் அதிகரித்துள்ளன.  இதுபோன்ற பிரச்னைகள் ஆண்டுக்கணக்கில் தொடர்கின்றன. இப்பிரச்னைகள் எதிர்க் கட்சிகளால் தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.  
   அதே சமயத்தில் மாநகராட்சிப் பகுதியில் அரசின் விலையில்லாப் பொருள்கள் விநியோகம், முதல்வரின் நிதி உதவித் தொகைக்கான திட்டத்தில் பயன்பெற வைத்தது, ஸ்மார்ட் சிட்டி குறித்த அறிவிப்பு போன்றவற்றை தன்னுடைய சாதனைகளாக ஆளும்தரப்பு முன்னிறுத்தியுள்ளது. மேலும் நகரின் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பணிகளை செய்வதாலேயே சாலைகள் சீரமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆளும்தரப்பு மக்களிடம் விளக்கம் அளித்துள்ளது.
    மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அ.கணேசமூர்த்தி, மாநகரில் நிர்வாக குளறுபடிகளை முன்னிறுத்தி ஆளும்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  இப்போதுள்ள பிரச்னைகளைத் தீர்த்துவைப்பேன் என உறுதி கூறுகிறார்.  அதே சமயத்தில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், ஈரோடு மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு என்ன திட்டங்களைக் கொண்டு வர முடியும் என்ற வாக்குறுதிகளை வெளியிடவில்லை என்கின்றனர் வாக்காளர்கள்.  
  மொத்தத்தில் ஈரோடு மாநகராட்சி பகுதி வாக்காளர்கள் கட்சிகளைக் கடந்து பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களிப்பார்களா? அல்லது ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட அரசு திட்டங்களின் மூலம் கிடைக்கும் பலன்களின் அடிப்படையில் வாக்களிப்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பில் அரசியல் கட்சியினர் உள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai