மல்லியம்துர்க்கம் மலைக்கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

சாலைவசதி செய்துதரக் கோரி, சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்துர்க்கம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 

சாலைவசதி செய்துதரக் கோரி, சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்துர்க்கம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள கடம்பூர் மல்லியம்துர்க்கம் கிராமம் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இக்கிராமத்துக்கு செல்ல சாலை வசதி கிடையாது. கடம்பூரில் இருந்து 7 கி மீ தொலைவு வனப்பகுதி வழியாக செங்குத்தான பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். இக்கிராம மக்கள் பாதையின் இருபுறமும் பதுங்கியிருக்கும் வனவிலங்குகளால் தாக்கப்படுகின்றனர். எனவே,  சாலை வசதி செய்து தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது. விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னிச்சையாக முடிவெடுத்து துண்டுப் பிரசுரம் வெளியிட்டதாக தெரியவந்ததை அடுத்து அவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி மல்லியம்துர்க்கம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
கோரிக்கையை பதாகையோடு அவர்கள் ஒன்றுதிரண்டு அப்பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயசங்கர் கொண்ட குழுவினர் மல்லியம்துர்க்கம் கிராம மக்களை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது, மல்லியம்துர்க்கம் கிராமத்தில் 435 வாக்குகள் உள்ளதாகவும் 100 பேர் மட்டுமே கிராமத்தில் வசிப்பதாகவும் மற்ற வாக்காளர்கள் சமவெளிப்பகுதியான கடம்பூர் பகுதியில் வசிப்பதால் கடம்பூருக்கு ஒரு வாக்குச் சாவடியும், மல்லியம் துர்க்கம் கிராமத்துக்கு ஒரு வாக்குச் சாவடியும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.  அதற்கு, 2 வாக்குச் சாவடிகள் அமைப்பது சாத்தியமில்லை என்றும் வரும் தேர்தலில் இதுகுறித்து பரிசீலனை செய்யலாம் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதை ஏற்று மல்லியம்துர்க்கம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com