மல்லியம்துர்க்கம் வாக்குச் சாவடிக்கு டிராக்டரில் சென்ற அதிகாரிகள்
By DIN | Published On : 18th April 2019 08:17 AM | Last Updated : 18th April 2019 08:17 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த மல்லியம்துர்க்கம் மலைக் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு டிராக்டர் மூலம் வாக்குப் பெட்டிகள் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகர் சட்டப் பேரவைத் தொகுதியில் 294 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 91 வாக்குச் சாவடிகள் தாளவாடி, தலமலை, குன்றி, கடம்பூர் மலைப் பகுதியில் உள்ளன.
வாக்குச் சாவடியில் பணியாற்றும் தேர்தல் அலுவலருக்கு சத்தியில் பணிஆணை வழங்கும் பணி மதியம் 1 மணி வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து, வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. சத்தியமங்கலம், கடம்பூர் மல்லியம்துர்க்கம் கிராமம் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. போதிய சாலை வசதியில்லாததால் கடந்த 50 ஆண்டுகளாக நடைபாதையாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருள்களை எடுத்துச் சென்றனர். கடந்த தேர்தலில் இருந்து டிராக்டர் மூலம் வாக்குப் பதிவு பெட்டி மற்றும் வாக்குப் பதிவுக்கான பொருள்களுடன் துணை ராணுவப் படையினர், வாக்குச் சாவடி ஊழியர்கள் சென்றனர். வனச் சாலையில் யானை, கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. யானைகள் நடமாட்டம் இல்லாததை உறுதிப்படுத்தியபிறகு பாதுகாப்பு கருதி, அவர்களுக்குத் துணையாக உள்ளூர் கிராமவாசிகள் உடன் சென்றனர். சாலை வசதியில்லாததால் தேர்தலைப் புறக்கணிப்பதாக மல்லியம்துர்க்கம் கிராம மக்கள் அறிவித்து பின்னர் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.