மாற்றுத் திறனாளிகள் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14,535 மாற்றுத் திறனாளிகளும் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்யும் வகையில் முன்னுரிமை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14,535 மாற்றுத் திறனாளிகளும் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்யும் வகையில் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி சி.கதிரவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 
மாவட்ட அளவில் 14,535 மாற்றுத் திறனாளிகள் வாக்குப் பதிவு செய்ய உள்ளனர். அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் அவர்கள் எளிதாக வந்து வாக்குப் பதிவு செய்ய சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
 ஒவ்வொரு வாக்குப் பதிவு மையத்திலும் ஆண், பெண் மற்றும் சிறப்பு வரிசை இருக்கும். சிறப்பு வரிசையில் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர் வாக்குப் பதிவு செய்வார்கள். இவர்கள் வெகு நேரம் காத்திருக்காமல் முன்னுரிமை அடிப்படையில் வாக்களித்துவிட்டு செல்லலாம். வாக்குப் பதிவு நடக்கும் மையம் அருகே பாலூட்டும் தாய்மார்களுக்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டு இருக்கும். மாற்றுத் திறனாளிகள் 100 சதவீதம் வந்து வாக்குப் பதிவு செய்வதற்காக 1,100 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றை பறக்கும் படையினர், மண்டல அதிகாரிகள் எடுத்து சென்று, தேவையான இடங்களில் பயன்படுத்துவர்.
தவழ்ந்து வரும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மொடக்குறிச்சி உள்பட 3 இடங்களில் 3  பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேர்தல் ஆணைய அனுமதியுடன் அரசு சார்பில், வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை அழைத்து வந்து வாக்குப் பதிவு செய்து மீண்டும் வீட்டில் கொண்டு சென்று விடுவார்கள். மற்ற யாருக்கும் அதுபோன்ற வாகன வசதி செய்யவில்லை. வேட்பாளர், அரசியல் கட்சியினர் மற்றும் பிற அமைப்பினர், வாக்காளர்களை வாகனத்தில் அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com