தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு  மே 10 வரை தண்ணீர் திறக்க கோரிக்கை

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு மே 10 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு மே 10 ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், கொடிவேரி அணை மூலம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியின் இரண்டு போகத்துக்கு விடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் குறைந்ததால் இரண்டாம் போகத்துக்காக ஒதுக்கிய நீரை முறை வைத்து திறந்தனர். தவிர கடந்த சில நாள்களாக மழை பெய்ததால் நீர் திறப்பு மூன்று நாள்களுக்கு மேல் நிறுத்தப்பட்டது. 
இந்நிலையில், இரண்டாம் போகத்துக்கான நீர் திறப்பு வியாழக்கிழமை ( ஏப்ரல் 25)நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன சபைத் தலைவர் சுபி.தளபதி கூறியதாவது: 
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் இரண்டாம் போகத்தில் 25,000 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு இன்னும், 15 நாள்கள் உள்ள நிலையில் வியாழக்கிழமையுடன் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.
பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைந்ததாலும் சாகுபடி நிலைக்கு ஏற்ப, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு முறை வைத்து நீர் திறக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நீர் மிச்சமானது. குறிப்பாக கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்ததால் இப்பகுதிக்கு முழுமையாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதனால் 2 டிஎம்சி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் அறுவடை காலத்தில் உள்ளதால் முறைவைத்து மே 10 ஆம் தேதி வரை இரண்டு டி.எம்.சி., நீரை வழங்கினால், சிறந்த மகசூலை பெறலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
மே  10 ஆம் தேதிக்கு மேல் நெல் அறுவடை முழு அளவில் நடக்கும். எனவே கடந்த முதலாம் போகத்துக்கு திறக்கப்பட்ட 14 நெல் கொள்முதல் நிலையங்களை இப்போதும் திறக்க வேண்டும். கடந்த முறை குறைவான தொகை ஒதுக்கீடு, தாமதமாக நெல் கொள்முதல் நடந்தது. அதை தவிர்த்து கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்து, ஒரு நாளைக்கு 2,000 மூட்டை வரை கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களுக்கான வாடகையை நிர்ணயித்து, நுகர்பொருள் வாணிபக் கழகமே அதனை வழங்க வேண்டும்.
கடந்த முறை, வாடகை தொகைக்காக எனக்கூறி ஒரு மூட்டைக்கு குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்து முறைகேட்டை ஊக்குவித்தனர். அவ்வாறு இல்லாமல், நேர்மையான கொள்முதலை நடத்த வேண்டும். கர்நாடகத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com