மலைவாழ் மக்களின் கால் நூற்றாண்டு கால கோரிக்கை: தாளவாடி, பர்கூரில் அமைகிறது ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

மலைவாழ் மக்களின் கால் நூற்றாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஈரோடு மாவட்டத்தில்

மலைவாழ் மக்களின் கால் நூற்றாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் மலைக் கிராமங்களில் 2 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க அரசு திட்டமிட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. 
ஈரோடு மாவட்டத்தில் வனப் பகுதிகள் சத்தியமங்கலம், அந்தியூர் என 2 பகுதிகளை உள்ளடக்கியது. சத்தியமங்கலம் வனப் பகுதியில் முக்கியப் பகுதியான தாளவாடி 10 ஊராட்சிகளை உள்ளடக்கியது. தாளவாடியை மையமாக வைத்து சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் பையண்ணபுரம், கேர்மாளம், ஆசனூர், இக்கலூர் மல்லாங்குழி, நெய்தாளபுரம், தலமலை, திகினாரை, திங்களூர் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. சுமார் 70,000 மக்கள் வசிக்கும் அடர்ந்த வனப் பரப்பில், பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்.  இங்கு மஞ்சள், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. 
 இதுபோல் அந்தியூர் வனப் பகுதியின் அடையாளப் பகுதியாக பர்கூர் உள்ளது. இந்த வனப் பகுதி மேற்கு மலை, கிழக்கு மலை என பிரித்து அழைக்கப்படுகிறது. மேற்கு மலையில் தாளக்கரை, ஒண்ணகரை, செங்குளம், சின்ன செங்குளம், தம்புரெட்டி, கொங்காடை, ஒசூர் போன்ற கிராமங்கள் உள்ளன. கிழக்கு மலையில் தேவர் மலை, ஒந்தனை,  தாமரைக்கரை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. பர்கூர் மலைக் கிராமங்களில் மக்காச்சோளம், பாசிப் பயறு, தட்டைப் பயறு, உளுந்து, கொள்ளு, ராகி, சாமை, தினை உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். 
சேமித்துவைக்கும் வசதி, போக்குவரத்து வசதி இல்லாதது, வன விலங்குகளின் அச்சுறுத்தல் போன்றவற்றால் வனப் பகுதியில் உள்ள 90 சதவீதம் விவசாயிகள் உடனுக்குடன் விளைபொருள்களை விற்று விடுகின்றனர். இதனை சாதகமாக்கிக்கொண்ட இடைத் தரகர்கள் சந்தை மதிப்பில் இருந்து 25 முதல் 50 சதவீதம் வரை குறைந்த விலைக்கு விளைபொருள்களை வாங்கிச் செல்கின்றனர். 
 இதனால் பல நேரங்களில் விவசாயிகள் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலை மாற விளைபொருள்களை சந்தைப்படுத்த, வாங்குபவர்களிடையே போட்டியை உருவாக்க அரசு பொதுவான சந்தையை ஏற்படுத்த வேண்டும் என மலைக் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில்தான், இப்போது தாளவாடி, பர்கூர் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அமைக்க தமிழக அரசின் வேளாண் விற்பனைத் துறை முடிவு செய்துள்ளது.  தாளவாடியில் இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், பர்கூர் மலையில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்த துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் காய்கறிகள், பழங்கள் தவிர்த்து பிற விளைபொருள்களை விற்பனை செய்ய முடியும். வனப் பகுதியில் விளைபொருள்களுக்கு சந்தைவாய்ப்பை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் வலுப்படுத்தும். மேலும், விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கப்படும். தொடக்கத்தில் வாரத்தில் ஒரு நாள் என்ற அடிப்படையில் செயல்படும். அதன்பிறகு விளைபொருள்கள் வரத்தை பொருத்து வாரத்தில் 2 அல்லது 3 நாள்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படும் என்றார்.
 கடம்பூருக்கும் தேவை:  
சத்தியமங்கலம் வனப் பகுதிக்குள்பட்ட கடம்பூர் மலையில் குத்தியாலத்தூர்,  கூத்தம்பாளையம், குன்றி ஆகிய 3 ஊராட்சிகள் உள்ளன. இங்கும் விவசாயம் பிரதானமாக உள்ளதால் கடம்பூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.சி.நட்ராஜ் தெரிவித்தாவது: 
மலைப் பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருமானால், மலைக் கிராம விவசாயிகளுக்கு கண்டிப்பாக பலன் அளிக்கும்.  தாளவாடி, பர்கூர் மலைப் பகுதிகளை போன்று கடம்பூர் மலைப் பகுதியில் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.  இந்த விளைபொருள்களை விற்க சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள சத்தியமங்கலத்துக்குதான் வர வேண்டும். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலன் அடையும் வகையில் கடம்பூரிலும் ஒழுங்கு விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com