முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோட்டில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: காவிரி தாய்க்கு பூஜை செய்து வழிபாடு
By DIN | Published On : 04th August 2019 10:02 AM | Last Updated : 04th August 2019 10:02 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து காவிரித் தாயை பூஜை செய்து வழிபட்டனர்.
ஆடி மாதம் 18 ஆம் தேதியை ஆடிப்பெருக்கு விழாவாக காவிரிக்கரையோர பகுதியினர் கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பெருக்கு விழாவான சனிக்கிழமை ஈரோடு மாவட்டம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஓடும் காவிரி, பவானி ஆற்றின் கரையோரங்களில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து காவிரித் தாயை பூஜை செய்து வணங்கினர்.
ஈரோடு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு அதிகாலை முதலே வந்து, ஆற்றில் நீராடி பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும், காவிரித் தாய்க்கு முளைப்பாரி வைத்து வணங்கிய பின், முளைப்பாரியை ஆற்றில் விட்டனர். ஏராளமான புதுமண ஜோடிகள் காவிரித் தாயை வணங்கி பழைய மாலைகளை ஆற்றில்விட்டு தாலி சரடு மாற்றிக் கொண்டனர். இதன் காரணமாக கருங்கல்பாளையம் காவிரிஆற்றின் கரையோரத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பொது மக்கள் அதிக அளவில் வந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆடிப்பெருக்கு விழாவன்று, ஈரோடு வஉசி, பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர். ஆனால் பராமரிப்புப் பணி காரணமாக வஉசி பூங்கா பூட்டப்பட்டுள்ளதால், அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினர். ஆடிப்பெருக்கு விழாவுக்காக ஆங்காங்கே பவானி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து சென்றனர்.
மேலும் கொடிவேரி மற்றும் காளிங்கராயன் அணை ஆகிய சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிந்தனர். ஆடிப்பெருக்கையொட்டி பெரியமாரியம்மன் கோயில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில், சென்னிமலை முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானி கூடுதுறை, பண்ணாரி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.