முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
உலகத் தமிழர்களின் படைப்புகளுக்கு தனி அரங்கம்
By DIN | Published On : 04th August 2019 09:58 AM | Last Updated : 04th August 2019 09:58 AM | அ+அ அ- |

உலகத் தமிழர்களின் படைப்புகளை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், அந்தப் படைப்புகளுக்கு புத்தகத் திருவிழாவில் தனி அரங்கு அமைக்கப்பட்டு கடந்த 11 ஆண்டுகளாக போற்றி வருகிறது மக்கள் சிந்தனைப் பேரவை.
மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் கடந்த 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புத்தகங்கள் விற்பனைக்கு 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், உலகத் தமிழர்களின் படைப்புகளுக்கு தனியே அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த அயலகத் தமிழ் படைப்பாளர் ஒருவரின் பெயரில் அமைக்கப்படும் இந்த படைப்பரங்கம் நிகழாண்டில் இலங்கையைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் கே. சிவத்தம்பி பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கில் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழ்ந்த, வாழ்கின்ற படைப்பாளர்களின் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் மட்டும் 4,000 தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. இந்த நாடுகளில் தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் அறிஞர்களின் புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய விவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படைப்பரங்கில் அயலகப் படைப்பாளர்களை அழைத்து உரை நிகழ்த்தவும், வாசகர்கள் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் இதுபோன்ற 4 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
உலகத் தமிழர்களின் இணைப்பு பாலமாக ஈரோடு புத்தகத் திருவிழா: உலகத் தமிழர் படைப்பரங்கை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்த கேள்விக்கு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது:
15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்றபோது மல்லிகை என்ற இதழை நடத்தி வந்த டொமினிக் ஜீவா என்பவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் மல்லிகை இதழின் அட்டைப் படங்களில் தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் இடம் பெற்றுள்ளதை என்னிடம் காண்பித்தார். தமிழகத்தில் உள்ள இதழ்களில் அயலகத் தமிழர்கள் போற்றப்படுவதில்லை, அழைக்கப்படுவதில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார். அதன் வெளிப்படாகதான் 2008 இல் ஈரோடு புத்தகத் திருவிழாவில் உலகத் தமிழர் படைப்பரங்கை ஏற்படுத்தினோம். மேலும் இந்த அரங்கு அயலகத் தமிழ் படைப்பாளர்களை கொண்டு திறந்துவைக்கப்படுகிறது.
உலகத் தமிழர்களின் படைப்புகளை மக்கள் சிந்தனைப் பேரவை தனது முன் முயற்சியில் வாங்கிச்சேர்த்து விற்பனைக்கு வைத்துள்ளது. இங்கு விற்பனையாகும் புத்தகங்களுக்கான தொகையை படைப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன், மீதமுள்ள புத்தகங்களையும் அனுப்பிவைத்து விடுகிறோம்.
20-க்கும் மேற்பட்ட வெளி நாடுகளில் இலக்கிய கூட்டங்களில் பேசியுள்ளேன். அப்போது எனது முக்கிய வேண்டுகோளாக உலகத் தமிழர் படைப்பரங்கிற்கு புத்தகங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.
தவிர வெளி நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களை நேரடியாக சந்தித்து இந்த வேண்டுகோளை தெரிவித்து வருகிறேன். அதன் பலனாகத்தான் நிகழாண்டில் 4,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அயலகத் தமிழர்களின் படைப்புகள் உலகத் தமிழர் படைப்பரங்கில் இடம் பெற்றுள்ளது.
புத்தக திருவிழாவுக்கு சில ஆண்டுகளாக அயலகத் தமிழர்கள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 200-க்கும் மேற்பட்டோர் வந்து, 3 நாள்கள் இங்கு தங்கி புத்தகங்களை வாங்கிச்சென்றுள்ளனர். இதுபோல் ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் தம்முடையை தாய் நாட்டு பயணத்தை புத்தகத் திருவிழா நடைபெறும் காலகட்டத்தை ஒட்டி திட்டமிடுகின்றனர்.
ஈரோடு புத்தகத் திருவிழா உலகத் தமிழர்களையும், தமிழக தமிழர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படும் இலக்கை நோக்கி பயணிக்க முடிவு செய்துள்ளது என்றார் த.ஸ்டாலின்
குணசேகரன்.