முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
குழந்தைகளை ஈர்த்த புத்தக அரங்குகள்
By DIN | Published On : 04th August 2019 09:58 AM | Last Updated : 04th August 2019 09:58 AM | அ+அ அ- |

ஈரோடு புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பயிற்சி ஏடுகளுக்கு என 30 அரங்குகள் உள்ளன. இந்த அரங்குகள் குழந்தைகளை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் இலக்கியங்கள், வாழ்வியல் நூல்களைக் கொண்ட அரங்குகளுக்கு இணையாக குழந்தைகளுக்கான குறிப்பேடுகள், வண்ணச் சிறுகதைகள், பசில்ஸ், புத்தகங்கள், பேரண்டிங் சார்ந்த நூல்கள், ஸ்போக்கன் இங்கிலீஷ் நூல்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் விற்கப்பட்ட அரங்குகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 230 அரங்குகளில் 30 அரங்குகள் குழந்கைளுக்கென்றே உள்ளது. வழக்கமாக, கெட்டி அட்டைகளுடன் கூடிய பெரிய எழுத்து வண்ணக் கதைப் புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் தமிழிலும் அத்தகைய நூல்கள் ஏராளமாக உள்ளன. விலையும் கட்டுப்படியாக இருக்கிறது. பொம்மைக் குதிரை, சும்கி அஞ்சலில் சேர்ப்பித்த கடிதம், பலூனும் நானும், மணவிழா ஆடைகள், கிராமத்துக்கு வந்த குரங்குகள் போன்ற அழகிய வண்ண அட்டைகளுடனான குட்டி குட்டிப் புத்தகங்கள் குழந்தைகளை ஈர்க்கின்றன.
அவை தவிர, அனிமேஷன் சிடிகள், பொம்மைகள், ஆன்மிக கருத்துகள் சகாய விலைக்குக் கிடைக்கின்றன. ரூ.20 தொடங்கி ரூ.300 வரை குழந்தைகளுக்கான புத்தகங்கள், பயிற்சி அட்டைகள் இங்கு விற்பனைக்கு கிடைக்கின்றன. குழந்தைகளின் வாசிப்பைத் தூண்டுவதோடு, அவர்களின் பன்முகத் திறனையும் சிந்தனையையும் வளர்க்கும் இடமாகவும் இருக்கிறது என்கின்றனர் பெற்றோர்.