முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
தாக்குதல்களைத் தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் விளங்குகிறது: நீதிபதி ஆர்.மகாதேவன்
By DIN | Published On : 04th August 2019 09:56 AM | Last Updated : 04th August 2019 09:57 AM | அ+அ அ- |

எத்தகைய தாக்குதல்கள் வந்தாலும் அவற்றைத் தாங்கி நிற்கும் மொழியாகத் தமிழ் விளங்குவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்தார்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் இரண்டாம் நாள் சிந்தனை அரங்க நிகழ்வு வஉசி பூங்கா மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் "தமிழ்-அன்றும், இன்றும்' என்ற தலைப்பில் பேசியதாவது:
உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு அறச்சிந்தனை வாய்ந்த படைப்புகளைத் தந்தது தமிழ் மொழி. காலம் இதுதான் என்று அறுதியிட்டு சொல்ல முடியாத அளவுக்குப் பழமை பொருந்திய மொழியாக, பண்பாடு, கலாசாரம் போன்ற அனைத்திலுமே ஈடு இணை இல்லாத மொழியாக தமிழ் விளங்குகிறது.
தொல்காப்பியத்தில் "எம்மனோர் புலவர்' என்ற வரி வருகிறது. தொல்காப்பியமே 2,000 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட படைப்பு என்று அறிந்தால் தொல்காப்பியத்திற்கு முன்பும் படைப்புகள் இந்த மண்ணிலே இருந்திருக்கின்றன என்பதை அந்த வரி சுட்டிக்காட்டுகிறது. உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு வாய்ந்த, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்ட தமிழ் படைப்புகள் பல்வேறு காரணங்களால் அழிந்துபோயின.
கிறிஸ்து பிறப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பற்ற படைப்பாக திருக்குறள் இந்த மண்ணுக்கு வந்தது. உலகத்தில் இருக்கும் படைப்புகளில் முகமற்ற மாந்தர்களுக்கான படைப்பாக அறியப்பட்டது திருக்குறள் மட்டும்தான்.
1 ஆம் நூற்றாண்டில் கபிலரும், பரணரும் இந்த மண்ணின் மாண்பை வியக்க செய்கிறார்கள், கபிலர் சங்கத் தமிழ் பாடல்களில் பெரும்பான்மையான பாடல்களைத் தந்து இந்த மண்ணின் மாண்பினை உயர்த்தினார் என்பது மட்டுமல்ல, படைப்பாளி துணிவு கொண்டவனாக இருப்பான் என்பதை அப்போதே பதிவு செய்தவர்.
2 ஆம் நூற்றாண்டில் இருந்து 4 ஆம் நூற்றாண்டு வரை தமிழகம் இருண்ட காலத்தை சந்திக்கிறது. களப்பிரர்கள் ஆட்சிக் காலம் அது, அந்தக் காலத்தில் ஏராளமான படைப்புகள் உருவானாலும் அதனை பதிப்பிக்க முடியவில்லை. இதனால் 4 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் என்ற உருவம் ஒதுக்கிவைக்கப்பட்டது.
4 ஆம் நூற்றாண்டு இறுதியில் மிகச்சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகளும், அவரைத் தொடர்ந்து சீத்தலை சாத்தனாரும் வருகின்றனர்.
5 ஆம் நூற்றாண்டில் திருமூலர் வந்ததாக சரித்திரம் கூறுகிறது. காரைக்கால் அம்மையார் தோன்றியதும் அந்த நூற்றாண்டுதான். 6 ஆம் நூற்றாண்டு திருமுறைகளைத் தந்த ஞானசம்பந்த மூர்த்தி, திருநாவுக்கரசு பெருமான் தோன்றிய காலம். சுந்தரமூர்த்தி நாயனார் தோன்றியது 7 ஆவது நூற்றாண்டு. 8 ஆவது நூற்றாண்டு பெண்ணிய சிந்தனைகளைத் தூண்டிய ஆண்டாள் தோன்றிய காலம். 9 ஆம் நூற்றாண்டு யாப்பெருங்கலம் என்ற படைப்பு தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் மக்களின், வாழ்க்கை, கலாசாரம், மொழியின் தன்மை அனைத்தையும் பதிவு செய்து காட்டுகிறது. 10 ஆம் நூற்றாண்டு பட்டினத்தார் தோன்றிய காலம்.
10 ஆம் நூற்றாண்டு வரையிலான படைப்புகள் மூலம், உன்னை நீ உணர, இறை தன்மையுடன் மாற, சிந்தனையில் தெளிவு பெற தேவையான அனைத்தையும் வழங்கினர். 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கில அறிஞர்கள் எழுதிக்காட்டியவை அனைத்தும், நாம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பே தெளிவுபடுத்தியவை.
11ஆம் நுôற்றாண்டில், ஒட்டக்கூத்தரும், பவனும், மேலும் பலரும் வைணவம் சார்ந்த பல பாடல்களை தந்தாலும், தமிழ், அதன் பண்பாடு, கலாசாரம், தொன்மையை பிரதிபலிப்பவையாகவே வழங்கினர்.
வால்மீகி ராமகாவியத்தின் படைப்பில் 478 பாடல்களில் சைவநெறியை எழுதினாலும், மீதமுள்ளவை வைணவத்தை விளக்குபவையாகவே உள்ளன. அதன் மூலம் வைணவம், சைவம் என்பது முக்கியமல்ல. அவை கூறும் அறங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என உணர்த்தினர்.
12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமான் 63 தனியடியார்களையும், ஒன்பது தொகையடியார்களையும் சேர்த்து 4,896 பாடல்கள் தந்து பெருமை சேர்த்தார். 13, 14 இல் அருணகிரிநாதர் அலங்கரித்தார். 15 இல் என்ரிகோ, எல்லீஸ் என்ற ஆங்கிலேயர் வந்தனர். அவர்கள் நோக்கம் வணிகம் என்றாலும், தமிழ் மொழி, அதன் சிறப்பு, அவற்றின் படைப்புகளைப் பதிப்பிக்கத் துவங்கினர். 16 ,17ஆம் நூற்றாண்டில், ஜி.யூ.போப், கால்டுவெல், எல்லீஸ் போன்றோர், தமிழ் கற்று, தமிழ் படைப்புகளை தமிழில் அச்சாக்கம் செய்தனர். தமிழ் இலக்கியத்தையும் அச்சாக்கத்துக்கு உள்ளாக்கினர். பெப்ரீசியஸ் எனும் அகராதியை தரங்கம்பாடியில் தமிழில் தொகுத்து அச்சில் தந்தனர்.
18ஆம் நூற்றாண்டில் இறுதியில் மாறுபட்ட சிந்தனை வருகிறது. இலக்கியம், வேறுபட்ட படைப்புகள் போன்ற சிந்தனைகள் எழுகின்றன. வேற்று நாடுகளின் படைப்புகளை நாமும் அறிய முடிந்தது. 19ஆம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய நிகண்டுகள், பழமையானவை அனைத்தும் பதிப்பிக்கப்பட்டன.
அப்போதுதான் புதுமைப்பித்தன் போன்ற சிறுகதை படைப்பாளிகள், வ.ராமசாமி, மவுனி, ந.பிச்சைமூர்த்தி, கு.அழகிரிசாமி என பல படைப்பாளிகள் உருவானார்கள். உரைநடையில் உ.வே.சாமிநாதய்யர் பல படைப்புகளை வழங்கினார்.
கடந்த 1950-க்குப்பின், அரசியல், மதபோதகர்கள், பல வீரியமிக்க தாக்கங்களால் பல படைப்பாளிகள் வெளிவரத் துவங்கினர். மாறி நிற்கும் மொழித்தன்மை, மாற்று மொழியின் பிரயோகம், மார்க்சிய சித்தாந்தம், பெண்ணியம் என பலவும் எழுந்து நிற்கிறது. எத்தகைய தாக்குதல்கள் வந்தாலும் அவற்றை தாங்கி நிற்கும் மொழியாக தமிழ் விளங்குவதை காண முடிகிறது. அதற்கு முக்கிய காரணம் உலகின் உன்னதமான ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் மொழியாக, தமிழ் விளங்கியதேயாகும் என்றார்.
தொழிலதிபர் எம்.சின்னசாமி தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் விழா அறிமுகவுரை நிகழ்த்தினர்.
புத்தகத் திருவிழாவில் இன்று
புத்தகத் திருவிழாவின் 3ஆவது நாள் சிந்தனை அரங்க நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. நிகழ்வுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் "கற்றதைச் சொல்கிறேன்' என்ற தலைப்பிலும், இந்து தமிழ் திசை ஆசிரியர் கே.அசோகன் "வாசிக்கலாம் யோசிக்கலாம்' என்ற தலைப்பிலும் பேசுகின்றனர்.