முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
தீரன் சின்னமலை நினைவு நாள்: ஓடாநிலையில் அரசியல் கட்சியினர் மரியாதை
By DIN | Published On : 04th August 2019 10:03 AM | Last Updated : 04th August 2019 10:03 AM | அ+அ அ- |

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 214 ஆவது நினைவு நாளையொட்டி ஈரோடு மாவட்டம், அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் மாவட்ட ஆட்சியர், அமைச்சர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி), உ.தனியரசு (காங்கயம்) ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 1,987 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக அவர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளைத் திறந்துவைத்து பார்வையிட்டார். அறச்சலூர் பேரூராட்சியின் சார்பில் தீரன் சின்னமலை நினைவிடத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் கலைப் பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட இசைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவ, மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ், முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.பி.கதிர்வேல், முன்னாள்ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் கணபதி மற்றும் தீரன் சின்னமலை வாரிசுதாரர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில்...
திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஈரோடு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி, மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் சு.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக சார்பில்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் பி.பழனியப்பன், சி.சண்முகவேல், அமைப்புச் செயலாளர் சேலஞ்சர்துரை, திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொமதேக
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் ஈரோடு மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர். நமது கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் காங்கயம் தங்கவேல் தலைமையில் துணைச் செயலாளர் ரமேஷ், பொதுச்செயலாளர்கள் யுவராஜ், வடிவேல், தலைவர் முருகசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமாகா
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் தலைமையில் மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் பேட்டை சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.