ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்கள்!

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்கள் பலவும் உள்ளன என்கிறார் பேராசிரியர் நா.மணி. 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் புத்தகங்கள் பலவும் உள்ளன என்கிறார் பேராசிரியர் நா.மணி. 
கற்றல், கற்பித்தலில் சிறந்த அகல்விளக்கு புத்தகங்களே. ஒரேயொரு புத்தகம் ஓராயிரம் விஷயங்களை ஓர் ஆசிரியர் நெஞ்சில் பதித்துவிடும். மிகச் சிறந்த ஆசிரியராகப் புரட்டிப் போட்டுவிடும்.  இப்படிப்பட்ட புத்தகங்கள் கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை தமிழில் அதிகம் இல்லை. அந்தப் பெருங்குறை தற்போது பெருமளவு போக்கப்பட்டுவிட்டது.   
 அப்படி ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று சிலவற்றை பட்டியலிடுகிறார் பேராசிரியர் நா.மணி.  இந்த புத்தகங்கள் அனைத்தும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் கிடைக்கின்றன என்கிறார் அவர். 
 அவற்றுள் சில புத்தகங்களை அடையாளப்படுத்துகிறார் பேராசிரியர் நா.மணி: 
பள்ளிக்கு முதல்முறையாக வரும் குழந்தையை எப்படி ஆராதிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும் என்று ருஷ்ய எழுத்தாளர் அம்னிஷ் வீலி எழுதிய "குழந்தைகளைக் கொண்டாடுவோம்' நூல் விளக்குகிறது. ஒரு வகுப்பை எடுத்துக் கொண்டு தனது மாற்றுக் கல்விக்கான அனைத்து நடைமுறைகளையும் நிகழ்த்திக் காட்டிய பிஜுபாய் படடேகா எழுதிய "பகல் கனவு' நூலை வாசிக்கும் எந்த ஒரு ஆசிரியரும் வெற்றிகரமான நல்லாசிரியராக வாழ் நாள் முழுவதும் ஜொலிப்பார். 
 ஆர்.நடராசன் எழுதிய "ஆயிஷா' புத்தகத்தை ஒவ்வொரு ஆசிரியரும் அவசியம் படிக்க வேண்டும். ஜப்பான் மொழி பெயர்ப்பு நூலான "டோட்டோசான்-ஜன்னலில் சிறுமி' ஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய மற்றுமொரு சிறந்த நூல்.     
 அதேபோல் பேராசிரியர் ச.மாடசாமி எழுதியுள்ள நூல்களில் பெரும்பாலானவை கல்வி சார்ந்த ஆசிரியர்களுக்கான அடிப்படை நூல்களே.  இந்த மாடசாமியே தமிழில் நமக்கு கிடைத்த கல்விக்  கலைக்களஞ்சியம் என்று போற்றும் நூல் ஒன்று உண்டு. அது அது ஆயிஷா நடராசனின், "இது யாருடைய வகுப்பறை? ' என்ற நூல்.  "வாத்தியார்'  என்ற நாவல் ஆசிரியர்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்களில் ஒன்று.   
 "நினைவுகள் அழிவதில்லை' என்ற நாவல்,  "ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான  கல்வி முறை',  "எதார்த்தத்தை எழுதுதலும் வாசித்தலும்' என்ற பாஃவ்லோ பிரைரே நூல்கள் போன்ற புத்தகங்களை ஆசிரியர்கள் தேடிப்பிடித்து படிக்க வேண்டும்.  கல்வி குறித்த தமிழில் வந்துள்ள நூல்களின் பட்டியல் இன்னும் நீளமானவை. இப்போது பரிந்துரைக்கும் நூல்களைப் படிக்கும் மனம் வந்துவிட்டால் மீதமுள்ள நூல்களைத் தேடிப் பிடித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கைகூடும்.  
 இப்படிப் படிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் மிகச் சிறந்த நல்லாசிரியர் ஆகிவிடுவார்கள். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மாணவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொட்டுவார்கள். எந்த அங்கீகாரம், விருதுகள் பற்றியும் கவலைகொள்ள மாட்டார்கள். அதற்கும் கூட ஒரு புத்தகம் இருக்கிறது. நூலின் பெயர் "முதல் ஆசிரியர்' என்றார் பேராசிரியர் நா.மணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com