கற்றால் மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கும் அறிவினைப் பெற முடியும்: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

கற்றால் மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கும் அறிவினைப் பெற முடியும் என ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசினார். 

கற்றால் மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கும் அறிவினைப் பெற முடியும் என ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசினார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் 15 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவையொட்டி 3ஆம் நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.  
 நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் பேசும்போது, "ஆளுமைத் தன்மையும், தன்னம்பிக்கையும் இளைஞர்களுக்குத் தேவை. அவற்றை புத்தகங்களால் மட்டுமே அளிக்க முடியும் ' என்றார்.  
 இதைத் தொடர்ந்து "கற்றதைச் சொல்கிறேன்' என்ற தலைப்பில், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது: 
புத்தகங்களைப் படிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வேறு யாரும் அளிக்க முடியாது. நல்ல விஷயங்களை அடுத்தவர்களுக்குப் பகிர்வது என்பது தமிழனின் குணம். நாட்டில் உள்ள பள்ளங்களில் எல்லாம் நீரை நிரப்பி, அணை கட்டினால் உனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என ஒரு மன்னனுக்கு புறநானூற்றுப் பாடல் சொல்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புறநானூற்றில் நீர் மேலாண்மை குறித்து சொல்லப்பட்டுள்ளது. "உடலுக்கு சாப்பாடு போடுகிறாயே, உன் உயிருக்கு என்ன கொடுக்கிறாய்' என்று கேட்ட திருவள்ளுவர் உயிருக்கு கொடை, வீரம், நற்செயல் மூலம் ஊதியம் கொடுப்பது சிறப்பு என்கிறார். 
  நமக்கு சொற்களைக் கையாளத் தெரிய வேண்டும். கற்றல், படிப்பது இரண்டும் வேறுபட்டவை. கற்கும்போது இருக்கும் பெருமையில் இவ்விரண்டும் மாறுபடுகின்றன. நாம் பெருமையோடு இருந்தால் நம் பரம்பரை போற்றப்படும். நாம் இழிவாக இருந்தால் தூற்றப்படும்.  7ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை பக்தி இலக்கியக் காலமாக இருந்தது. பக்தி இலக்கியங்களில் பக்தி மட்டும் சொல்லப்பட்டு இருப்பதாக நினைத்து பலர் அதனைப் படிக்காமல் விட்டு விடுகின்றனர். ஆனால் பக்தியைத் தாண்டி பல விஷயங்கள் பக்தி இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன. பலவற்றையும் கற்றால் மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கும் அறிவினைப் பெற முடியும்.
 சங்கப் பாடல்களில் குழல், யாழ், முழவு என மூன்று இசை வாத்தியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாத்தியப் பெயர்களில் சிறப்பு ழகரம் இருப்பதால், நாம்தான் அதனைக் கண்டுபிடித்தோம் என உறுதியாகச் சொல்ல முடிகிறது. எத்தனை காலமானாலும் தமிழ் இனிமையாகவே இருந்து வருகிறது. நாம் படிப்பது எதற்காக என்றால் அதன்படி வாழ்வதற்கே. வாழப் பழகப் படிக்க வேண்டும்.
 வாழ்க்கையும், வார்த்தையும் ஒன்றாக இருந்தால் அவர்களை உலகம் ஒருபோதும் மறக்காது. தனக்குள் இருக்கும் மிருகத்தை வெளியில் விடாமல் இருப்பதற்காகப் படிக்க வேண்டும். வாசித்தால் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்றார்.
 முன்னதாக "வாசிக்கலாம் யோசிக்கலாம்' என்ற தலைப்பில் இந்து தமிழ் திசை ஆசிரியர் கே.அசோகன் பேசினார். 
மாணவர்களுக்கு மரக்கன்றுகள்:  மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார். அப்போது அவர் புத்தகத் திருவிழாவிற்கு வரும் மாணவர்களுக்கு இறுதி நாளில் மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான படிவத்தை அரங்கின் நுழைவாயிலில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். மாணவர்கள் கேட்கும் மரக்கன்றுகளின்  எண்ணிக்கை அளவுக்கு வில்லைகள் அளிக்கப்படும். புத்தகத் திருவிழாவின் இறுதி நாளில் வில்லைகளைப் பெற்றுக்கொண்டு மரக்கன்றுகள் அளிக்கப்படும். இதற்கான படிவம் திங்கள்கிழமை முதல் வழங்கப்படும் என்றார்.


புத்தகத் திருவிழாவில் இன்று 
புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வு திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில்,  "சமுதாய மாற்றத்தை சாதிக்கும் ஆற்றல் பேச்சுக்கா? எழுத்துக்கா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. சாலமன் பாப்பையா நடுவர் பொறுப்பேற்கும் இந்தப் பட்டிமன்றத்தில், "பேச்சுக்கே' என்ற அணியில் பேராசிரியர் த.ராஜாராம்,  எம்.சண்முகம், எஸ்.ராஜா ஆகியோரும், "எழுத்துக்கே' என்ற அணியில் மரபின் மைந்தன் ம.முத்தையா, கவிதா ஜவகர், பாரதி பாஸ்கர் ஆகியோரும் பேசுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com