ஈரோட்டில் ஜெயலலிதா சிலை திறப்பு: திமுகவினர் எதிர்ப்பு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையை செவ்வாய்க்கிழமை இரவில் அமைத்தனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
ஈரோடு அரசு மருத்துவமனை சாலை அருகே எம்.ஜி.ஆர்., காமராஜர், ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் சிலைகளும், பன்னீர்செல்வம் பூங்கா அருகில் பெரியார், அண்ணா சிலைகளும் இருந்தன. போக்குவரத்துக்கு இடையூறாக இச்சிலைகள் இருப்பதால் பன்னீர்செல்வம் பூங்காவில் திமுக, சில அமைப்புகள் சார்பில் புதிய கட்டடம் கட்டி அதன் மீது 6 சிலைகள் வைக்க வசதி செய்தனர். அங்கு பெரியார், அண்ணா ஆகியோர் சிலைகளை ஏற்கெனவே அமைத்து அதன் கீழே நூலகமாக மாற்றி பயன்பாட்டில் உள்ளது.
கடந்த ஆண்டு அங்கு அதிமுகவினர் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவினர். அப்போது திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவைத் தொடர்ந்து அந்தந்த கட்சியினர் சார்பில் இங்கு சிலை அமைக்க ஈரோடு மாநகராட்சியிலும், மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கோரி கடிதம் அளித்தனர். இதனிடையே பிரம்மாண்டமாக கருணாநிதி சிலையை அமைத்து இங்கு வைக்க அனுமதி கிடைக்காததால் முனிசிபல் காலனியில் அமைத்து மு.க.ஸ்டாலினை வைத்து திறப்பு விழா நடத்தினர்.
தவிர சேலத்தில் செய்யப்பட்ட ஜெயலலிதா சிலை மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்திலும், கருணாநிதியின் மற்றொரு சிலையை திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி வீட்டிலும் வைத்திருந்தனர்.
ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஈரோட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வர உள்ளதால் ஜெயலலிதா சிலையை பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நிறுவ அதிமுகவினர் முடிவு செய்தனர். செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு அங்கு கூடினர். இதை அறிந்து திமுகவினரும் அங்கு சென்று பெரியார் சிலை அருகே கருணாநிதி சிலையை அமைக்கத் திட்டமிட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் மாநகராட்சி நிர்வாக அனுமதியுடன் வந்து நள்ளிரவு 1 மணிக்கு ஜெயலலிதா சிலையை அமைத்து துணியால் மூடிச் சென்றனர். இதற்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி, கட்சியினர் முழக்கம் எழுப்பினர். அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) அர.அருளரசு சிலை வைக்க அனுமதியுடன் வந்ததால் ஜெயலலிதா சிலையை வைக்க அனுமதித்துள்ளோம். நீங்கள் கொண்டு வரும் சிலைக்கான அனுமதியை வழங்கிவிட்டு, சிலை வையுங்கள் எனக் கூறி திருப்பி அனுப்பினர். இதைத்தொடர்ந்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். நூலகத்துக்கு வருபவர்கள் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.
இதுகுறித்து, திமுக மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி கூறியதாவது:
கருணாநிதி சிலையை வைக்க ஏற்கெனவே கடிதம் கொடுத்தும் எங்களுக்கு அனுமதி வழங்காமல், அதிமுகவினருக்கு மட்டும் அனுமதி வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது. நாங்களும் சிலையை வைத்துக் கொள்கிறோம். அனுமதி கிடைத்த பின் திறப்பு விழா நடத்துகிறோம் என்று கூறியதை போலீஸார் ஏற்க மறுத்துவிட்டனர். இதுகுறித்து விரைவில் முடிவு எடுப்போம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com