அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநாடு
By DIN | Published On : 25th August 2019 09:27 AM | Last Updated : 25th August 2019 09:27 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட 3 ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராதாமணி தலைமை வகித்தார். கூட்டத்தில், அங்கன்வாடி மையத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. தொகுப்பூதியம் மதிப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18,000 வழங்க வேண்டும். ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியருக்கு ரூ. 5 லட்சமும், உதவியாளருக்கு ரூ. 3 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும். மாத ஓய்வூதியத்தை ரூ. 3,500 ஆக உயர்த்த வேண்டும்.
பணி மூப்பு அடிப்படையில் அரசு புதிதாக தொடங்கும் எல்.கே.ஜி. வகுப்புகளுக்குப் பயிற்சி பெற்ற தகுதியுடைய பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
துறை சார்ந்த பணி தவிர மாற்றுப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. மத்திய அரசு அறிவித்த கூடுதல் சம்பளத்தை வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள்எழுப்பி பேரணியாகச் சென்றனர். தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.