வேணுகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தி

பவானிசாகர் அருகே உள்ள வேணுகோபால சுவாமி, கோபால கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.    

பவானிசாகர் அருகே உள்ள வேணுகோபால சுவாமி, கோபால கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.    
பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜயந்தி பண்டிகையானது கருட பகவான், வேணுகோபால சுவாமி, கோபால கிருஷ்ணர் ஆலயம் ஆகிய மூன்று கோயில்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கருட பகவான் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் மற்ற 2 கோயில்களில் மட்டும் வெள்ளிக்கிழமை விழா தொடங்கியது.
முன்னதாக, கோயில் முன்புறம் உட்டி மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 100 அடி உயரமுள்ள பச்சை மூங்கில் மரத்தை பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க பவானி ஆற்றுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்து மூங்கில் மரத்தில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஒன்றை கட்டி, அதை சுற்றிலும் வண்ணத் துணி கட்டி பலூன்களால் அலங்கரித்து கோயில் முன்புறம் நட்டனர். இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், பஜனை நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை நடைபெற்றன. சனிக்கிழமை மாலை 5 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா தொடங்கியது. அப்போது, உட்டி மரத்தின் மேல் சிறுவர்கள் ஏற முயற்சி செய்தனர். மரத்தின் மீதேறி தேங்காயை எடுத்து வரும் சிறுவனுக்கு சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டு பூஜைகள் தொடங்கியது. வாத்திய இசை முழங்க சுவாமி திருவீதியுலா புறப்பட்டு அம்மன் கோயில் வீதி, பங்களாமேடு, அண்ணாநகர், விக்னேஷ்நகர், ராஜீவ்நகர், வினோபாஜி வீதி, தேவாங்கபுரம் வழியாக கோயில் அருகே வரும்போது உறியடிக்கும் உற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தேங்காயை வைத்து சுற்றிலும் மூங்கில் குச்சிகள் கொண்டு வட்ட வடிவில் கட்டப்பட்ட கட்டினை இருபுறம் கட்டப்பட்ட கயிறுகள் மூலம் தரையில் ஒருவர் இழுக்க மற்றொருவர் நீள தடியால் மூங்கில் கட்டை ஓங்கி அடிப்பார். மூங்கில் கட்டுக்குள் உள்ள தேங்காய் உடையும் வரை அடிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியைக் காண திரளான மக்கள் வந்திருந்தனர். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் கட்டுக்குள் உள்ள தேங்காய் உடைந்தவுடன் சுவாமி திருவீதியுலா முடிந்து கோயிலை வந்தடைந்தது. பின்னர், தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உட்டி மரம் பிடுங்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com