விநாயகர் சிலை அமைப்பு, ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலை அமைப்பது, ஊர்வலம் நடத்துவது குறித்த

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலை அமைப்பது, ஊர்வலம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாகுமார் தலைமை வகித்து, சென்னை உயர்நீதிமன்ற உத்திரவின்படியும், தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும் விநாயகர் சிலைகள் அமைக்கவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அறிவுறுத்திப் பேசியதாவது:
கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகள் நிபந்தனைகளுக்கு உள்பட்டு வைக்க வேண்டும். புதியதாக விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை. 
விநாயகர் சிலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அமைத்தால்,மேற்படி இட உரிமையாளரிடமும், சாலை ஒரத்தில் அமைக்கும்பட்சத்தில் நெடுஞ்சாலைத் துறையினர், உள்ளாட்சித் துறை, கவால் துறை, தீயணைப்புத் துறை, மின் துறை ஆகியோரிடம் எழுத்து மூலமான அனுமதி பெறப்பட வேண்டும். 
ரசாயன கலவையால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை நிறுவக் கூடாது. ஒவ்வொரு சிலை வைக்கும் இடத்திலும் மேற்கூரை தீப்பிடிக்காத ஆஸ்பிட்டாஸ் அட்டையால் அமைக்க வேண்டும். தீத்தடுப்பு சாதனங்கள், இரண்டு டிரம்களில் தலா 250 லிட்டர் தண்ணீர் வைக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தில் கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும். சிலை வைக்கும் பீடத்துடன் சேர்த்து 10 அடிக்குள்ளாக விநாயகர் சிலை இருக்க வேண்டும். இதர வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் அருகில் சிலை அமைக்கக் கூடாது. 
ஊர்வலம், சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜாதி மத பேதங்களைத் தூண்டக்கூடிய கோஷங்களை எழுப்பக் கூடாது. சிலை ஊர்வலம் காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட தேதியில், வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும். சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாள்களுக்குள் சிலை எடுத்து கரைக்கப்பட வேண்டும். சிலையைக் கரைக்க எடுத்துச் செல்ல மாட்டு வண்டி, மீன்பாடி வண்டி, மூன்று சக்கர வாகனங்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலை நிறுவப்பட்டுள்ள இடம், ஊர்வலத்தில் பட்டாசு, வெடி போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது. 
சிலைகளின் உயரம், வாகனம் இரண்டும் சேர்த்து ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள மின் கம்பிகளைத் தொடாமல், 12 அடி உயரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊர்வலத்தை காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஊர்வலத்தில் 2 ஒலிபெருக்கிகள் (பெட்டி) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com