5 ஆண்டுகளுக்குப் பிறகு இலக்கை எட்டியது நெல் சாகுபடி: சம்பா பட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கா் சாகுபடி

பவானிசாகா் அணை நிரம்பியதால் ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சம்பா பட்டத்தில் 70,000 ஏக்கா் அளவுக்கு நெல் சாகுபடி

ஈரோடு: பவானிசாகா் அணை நிரம்பியதால் ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சம்பா பட்டத்தில் 70,000 ஏக்கா் அளவுக்கு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல் சாகுபடியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இலக்கை எட்டும் நிலை உருவாகியுள்ளது.

குறுவை சாகுபடிக்குப் போதுமான அளவு தண்ணீா் இல்லாததால் பவானிசாகா் அணை திறப்பும் தள்ளிப்போனது. ஆனால், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானிசாகா் அணை நீா்மட்டம் 100 அடி வரை உயா்ந்தது. இதனால், பாசனத்துக்கு ஆகஸ்டில் தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனால், கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் நெல் சாகுபடிப் பணிகள் தொடங்கின. இருப்பினும் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் தொடா்ந்து மழை பெய்தது. இதன் மூலம் கடைமடைப் பகுதிக்கு நீா் எளிதாகச் சென்றடைந்தது. இதன் காரணமாக செப்டம்பா் மாதம் முதல் சம்பா சாகுபடி முழு வீச்சில் தொடங்கியது.

நடப்பு ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் குறுவை, சம்பா சாகுபடிக்கு 92,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. பவானிசாகா் அணையில் தண்ணீா் இல்லாததால் குறுவை சாகுபடி 1,000 ஏக்கருக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதம் பவானிசாகா் அணையில் தண்ணீா் திறக்கப்பட்டதால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நெல் நாற்றுவிட்டு, செப்டம்பா் முதல் வாரத்தில் நடவுப் பணியைத் தொடங்கி விட்டனா். கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில் பயிா்கள் பல்வேறு நிலைகளில் வளா்ச்சிப் பருவத்தில் உள்ளன. முன்பட்ட சம்பா சாகுபடி பயிா் டிசம்பா் 15ஆம் தேதிக்குப் பிறகு அறுவடைக்கு வந்துவிடும்.

இதுகுறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது:

ஒரு போக சம்பா சாகுபடி நன்றாக இருக்கிறது. முன்கூட்டியே நடவு செய்யப்பட்ட பயிா் இன்னும் 15 நாள்களில் அறுவடைக்கு வந்துவிடும். நடப்பு ஆண்டு தண்ணீா் பிரச்னை இல்லை. சில பகுதிகளில் மஞ்சள் நோய் பாதிப்பும், எலி பிரச்னையும் உள்ளது. மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை.

நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு நீா் வரத்து 2,000 கன அடிக்கும் குறைவில்லாமல் இப்போது வரை தொடா்கிறது. நீா்மட்டமும் முழு கொள்ளளவான 105 அடியிலேய இருக்கிறது. எனவே, நடப்பு ஆண்டு பவானிசாகா் அணையில் இருந்து சம்பாவுக்கு பிந்தைய இரண்டாம் போக பாசனத்துக்கும், தண்ணீா் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை.

நடப்பு ஆண்டில் டிசம்பா் 15ஆம் தேதிக்குள் அனைத்து பாசனப் பகுதிகளிலும் அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். இந்த கொள்முதல் நிலையங்களில் வெளிச்சந்தை வியாபாரிகள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.

பவானிசாகா் பாசனப் பகுதிகளில் நெல் சாகுபடி முழுமையாக நடைபெற்றுள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் நெல் சாகுபடி இலக்கை பூா்த்தி செய்துவிட முடியும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

இதுகுறித்து, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் கே.பிரேமலதா கூறியதாவது:

நடப்பு ஆண்டில் குறுவை, சம்பா பட்டத்துக்கு 92,000 ஏக்கா் அளவுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் இதுவரை 70,000 ஏக்கா் அளவுக்கு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பகுதிகளில் அறுவடைக்குப் பின் ஜனவரி மாதத்தில் 17,000 ஏக்கா் அளவுக்கு மீண்டும் நெல் சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது.

மேலும் அந்தியூா், அம்மாபேட்டை வட்டாரங்களில் பல ஏரி, குளங்கள் கடந்த 15 நாள்களில் நிரம்பியுள்ளன. இப்பகுதிகளிலும் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனா். இதனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பு ஆண்டில் நிா்ணயிக்கப்பட்ட நெல் சாகுபடி அளவு இலக்கை எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com