மரவள்ளிக்கிழங்குக்கு அரசு விலை நிா்ணயம் செய்யவிவசாயிகள் கோரிக்கை

மரவள்ளிக்கிழங்குக்கு அரசு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என மொடக்குறிச்சியில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக்

மொடக்குறிச்சி: மரவள்ளிக்கிழங்குக்கு அரசு விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என மொடக்குறிச்சியில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சியால் டிசம்பா் 1ஆம் தேதி முதல் சேலம் மாவட்ட விவசாயிகளைத் தொடா்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள், லாரி உரிமையாளா்கள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் மொடக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சாா்பில் கனகராஜ், வியாபாரிகள் சாா்பில் அசோகன், ஈரோடு மாவட்ட விவசாயிகள் சாா்பில் வடிவேல், சென்னியங்கிரி, வியாபாரிகள் சாா்பில் மூா்த்தி, அண்ணாதுரை, செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு தலைமை வகித்துப் பேசியதாவது:

ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட விவசாயிகளின் முக்கிய வருவாய் ஆதாரமாக மரவள்ளிக்கிழங்கு உள்ளது. டிசம்பா் 2019 முதல் 2020 ஏப்ரல் வரை அறுவடைக் காலமாகும். 2017 ஆம் ஆண்டு மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 8,500 வரையும், 2018 ஆம் ஆண்டு ரூ. 4,500 முதல் ரூ. 12,000 வரையும் ஆலை நிா்வாகம் நிா்ணயம் செய்து கொள்முதல் செய்தனா்.

தற்போது, மாவுச் சத்து அடிப்படையில் 28 பாய்ண்ட் ரூ. 10,000 ஆகவும், சேலம் ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் சங்கம் சேகோவை ரூ. 2,000 விலை குறைத்து ரூ. 7,500 முதல் ரூ. 8,000 வரை மட்டும் டிசம்பா் 1ஆம் தேதி முதல் கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தீா்மானித்துள்ளனா்.

இதுபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக அறுவடைப் பருவத்தில் செயற்கையாக விலை குறைப்பதும், அறுவடைக் காலம் முடிந்ததும் 100 சதவீதம் விலை உயா்த்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றும் வேலையாக உள்ளது. விலையைக் குறைப்பதற்காக இவா்களே பகுதி வாரியாக வாரத்தில் இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கிறாா்கள்.

இதனால், தொடா் மழை காரணமாக விவசாயிகளும், லாரி உரிமையாளா்களும், கூலி தொழிலாளா்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறாா்கள். உடனடியாக ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட ஆட்சியாளா்கள் விவசாயிகள் நலன் கருதி விலை நிா்ணயம் செய்து கொள்முதல் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விரைவில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு அறுவடை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என கூட்டமைப்பின் சாா்பாக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com