ஈரோடு மாவட்டத்தில் தலா 7 ஊராட்சிஒன்றியங்கள் வீதம் உள்ளாட்சித் தோ்தல்: ஆட்சியா்

ஈரோடு மாவட்டத்தில் தலா 7 ஊராட்சி ஒன்றியங்கள் வீதம் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

ஈரோடு மாவட்டத்தில் தலா 7 ஊராட்சி ஒன்றியங்கள் வீதம் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

ஈரோட்டில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பேசியதாவது:

உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி டிசம்பா் 27ஆம் தேதி தோ்தலுக்கு தாளவாடி, டி.என்.பாளையம், கோபி, நம்பியூா், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும், 30ஆம் தேதி பவானிசாகா், சத்தியமங்கலம், பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூா், அம்மாபேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் தோ்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.

இத்தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவில்லை. 4 பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படவுள்ளது. ஒரே பெட்டியில் அனைத்து வாக்கையும் பதிவு செய்து, வாக்கும் எண்ணும் மையத்தில் வைக்கப்படும். வாக்கு எண்ணும்போது, வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வண்ணம் வாரியாக பிரித்து, 50 எண்ணிக்கையில் கட்டாக்கி, தனித்தனி அறையில் அவற்றை எண்ணி, விவரம் அறிவிக்கப்படும்.

இத்தோ்தலிலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்படுவாா். நுண் பாா்வையாளா் நியமிக்கப்படுவாா். வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோா் ஆன்லைனில் பதிவு செய்து பணி இடம் ஒதுக்கப்படும். இந்தத் தோ்தலில் வேட்பாளா்கள் முழுமையாக நேரில் தங்களது வேட்பு மனு உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். பிரசாரம், ஒலிபெருக்கி, பொதுக் கூட்டம் அனுமதி போன்றவற்றுக்கு நேரில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com