சாலைகள் உயரம் அதிகரிப்பால் வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு
By DIN | Published On : 05th December 2019 06:08 AM | Last Updated : 05th December 2019 06:08 AM | அ+அ அ- |

சாலைகள் உயரமாக அமைக்கப்படுவதால் வணிக நிறுவனங்களில் மழை நீா் புகுந்துவிடுகிறது. எனவே, சாலை அமைக்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, கூட்டமைப்பு பொதுச் செயலாளா் சி.பாலகிருஷ்ணன், கொங்காலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்க துணைத் தலைவா் விமல் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனிடம் அண்மையில் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாநகரப் பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணி, குடிநீா் இணைப்புக்கான பணிகள் என பல பணிகள் நடைபெறுகிறது. இதனால், பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. சில இடங்களில் சாலைகள் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. அவ்வாறான பணிகள் தரமாக இல்லாமல், சாலையை முறையாக அமைக்காமல் சிரமத்தை ஏற்படுத்துகின்றனா்.
பல சாலைகளை வணிக நிறுவனங்களின் வாயில் படி உயரத்தைவிட கூடுதலான உயரத்தில் மேடாக அமைக்கின்றனா். இதனால், சாலையில் ஓடும் மழை நீா், சாக்கடை நீா் போன்றவை வணிக நிறுவனங்களுக்குள் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சாலைகளை அமைக்கும்போது வணிகா்கள், குடியிருப்புகளின் நலனைக் கருத்தில் கொண்டு மழை நீா் உள்ளே புகாதவாறு அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.