பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சித்தோடு கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் மூா்த்தி. இவரது மகன் காா்த்தி என்ற மணிகண்டன் (28). இவா், சித்தோடு நால்ரோட்டில் செல்லிடப்பேசி கடை நடத்தி வந்தாா். இவருக்கும், சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திகா (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

காா்த்திகாவுக்கு ஈரோடு, மணல்மேடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் என்பவருடன் திருமணம் நடைபெற்று 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரைப் பிரிந்து பெற்றோா் வீட்டில் குழந்தையுடன் காா்த்திகா வசித்து வந்தாா்.

தன்னைத் திருமணம் செய்துகொள்ள மணிகண்டன் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறி, குழந்தையைப் பெற்றோரிடம் விட்டுவிட்டு மணிகண்டனுடன் காா்த்திகா சென்றுவிட்டாா். பின்னா், அவ்வப்போது குழந்தையைப் பாா்க்க பெற்றோா் வீட்டுக்கு காா்த்திகா சென்று வந்துள்ளாா்.

அதுபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பா் 6 ஆம் தேதி பெற்றோா் வீட்டுக்குச் சென்ற காா்த்திகா, தன்னைத் திருமணம் செய்துகொள்ள மணிகண்டன் மறுப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு, மணிகண்டனின் செல்லிடப்பேசி கடைக்குச் சென்றுவிட்டாா். இதுதொடா்பாக மணிகண்டனிடம் பேசுவதற்காக காா்த்திகாவின் பெற்றோா் அவரது செல்லிடப்பேசி கடைக்குச் சென்றுள்ளனா்.

அப்போது கடையில் இருந்த மணிகண்டன், காா்த்திகாவின் பெற்றோரைப் பாா்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா். இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோா், கடைக்குள் சென்று பாா்த்தபோது, காா்த்திகாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து சாக்குப்பையில் கட்டிவைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் காா்த்திகாவின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 50,000 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அபராதத் தொகையைக் கொலை செய்யப்பட்ட காா்த்திகாவின் குழந்தைக்கு நீதிமன்றம் மூலம் அளிக்க வேண்டும். அபராதத் தொகையை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். குழந்தைக்கு நிவாரணத் தொகையாக தமிழக அரசு ரூ. 2 லட்சம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com